வியர்வையைச் சுரண்டும் முதலாளிகள்; விரசத்தைப் பரப்பும் பொழுதுபோக்குச் சாதனங்கள்; அநியாயத்தின் சூத்திரதாரிகளாய் அரசியல்வாதிகள்; இயலாமையால் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட பாமரமக்கள்; கடவுளின் பெயரால் கண்ணாமூச்சி விளையாடும் காவியுடைகள்;காதல் என்ற போர்வையில் கனவுகளையும் கற்பையும் பறிகொடுக்கிற அபலைகள்; தடியெடுத்தாலே தர்மம் கிடைக்குமென்ற தறுதலைகள்; உரிமைகேட்பதாய் ஊரைக்கொளுத்துகிற உன்மத்தர்கள் - இன்னும் தீமையின் பரிமாணங்களாய், தீக்கொழுந்துகளாய், தீராத தொழுநோயாய் நம்மை உடனிருந்தே கொல்லுகிற அபாயங்களிலிருந்து சற்றே இளைப்பாறவே, ஆர்வமோ அல்லது திறமையோ, ஏதோ ஒரு உந்துகோலால் நெம்பப்பட்டு இணையத்துக்கு வருகிறோம்.
ஏற்புடையதோ ஏற்கமுடியாததோ, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுகிறோம். கடுமையான விவாதங்களின் கனலில் சற்றே கண்டனங்களின் பொறியும் பறக்கத்தான் செய்கின்றன. ஆயினும், சமநோக்கு உடைய விஷயங்களில் கைகுலுக்கி, புன்னகைகளைப் பரிமாறிக்கொள்ளுகிறோம்.
நேற்றைய தவறுகளை இன்று மீண்டும் செய்ய எவராலும் இயலும். ஆயினும், நேற்று புரிந்த நற்செயலை இன்று மீண்டும் செய்வது அனைவராலும் ஆகக்கூடிய காரியமல்ல.
இணையம் இதயங்களை இணைக்கிறதோ இல்லையோ,பரிச்சயத்தை வளர்த்து, நட்புக்கு அடிகோலுகிறது. விவாதங்கள் அறிவை விசாலப்படுத்துகின்றனவோ இல்லையோ, நாணயத்திற்கு இன்னோர் பக்கமும் உண்டு என்ற உண்மையை மெல்ல மெல்ல நமக்குள்ளே உறுத்தி உறுத்தி இறக்குகின்றன. ஒரு சின்னஞ்சிறிய சிந்தனைத் தேசத்தின் வரைபடமாகவே இணையங்களும், வலைத்தளங்களும் அவற்றின் விவாதங்களும் பன்மையை வெளிப்படுத்துவதாய் பரிமளித்துக்கொண்டிருக்கின்றன.
இங்கும் வந்து எதார்த்த உலகத்தின் இடிபாடுகளின் மிச்சத்தைக் கொண்டு குவிப்பது என்பது, முற்றத்தில் தொழுவம் வைத்து விட்டு மூத்திரவாசனை வருகிறதே என்று முனகுவதற்கு ஒப்பாகும்.
ஒப்புடைய கருத்துக்களில் காட்டுகிற நட்பை மனதின் அடித்தளத்தில் வைத்திருத்தல், ஒப்புக்கொள்ள முடியாத விஷயத்தின் மீது விவாதிக்கிறபோது நாக்குக்கு நாகரீகத்தை ஞாபகத்தில் வைத்திருக்கும். முன்முடிபுகளுடன் கூடிய விவாதங்கள், விவாதிப்பவர்கள் என்ன நியாயத்தை எடுத்துரைத்தாலும், அடிமனதில் இருக்கிற காழ்ப்புணர்ச்சி காரணமாக, உலகம் உருண்டை என்றாலும் அதை மறுத்து உரையாட ஊக்குவிக்கும்.
இந்த ஓராண்டில் இணையக்குழுமங்களின் செயல்பாட்டை அவதானித்ததில், விரல்விட்டு எண்ணக்கூடிய திறமைசாலிகள் தவிர, பிறர் மற்றவரைக் காட்டிலும் தாங்களே புத்திசாலிகள் என்று நிரூபிக்க முயல்வதாலேயே, தனி மனிதத் தாக்குதல்களுக்கும் அருவருக்கத்தக்க வாதப்பிரதிவாதங்களுக்கும் வழிவகுத்து தெருவிலிருக்கும் குப்பையை வாரிக்கொணர்ந்து கூடத்தில் குவிப்பது போல, நம்மை நாமே அழுக்காக்கிக்கொள்ள வழிவகை செய்கின்றன.
இது அறிவுரையல்ல; கருத்து! எங்கும் எதிலும் பரம்பொருளைக் காண்கிற நான், எனது கருத்துக்கள் தவறாய் இருக்கும்பட்சத்தில் உங்களது பாதாரவிந்தங்களைத் தொட்டு மன்னிப்புக் கோருகிறேன்.
நன்றி!
குருமூர்த்தி
**************************************************************************
மெய்யின் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளுமிவ்
வையந்த் தன்னோடு கூடுவதில்லை யான்
**************************************************************************
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment