டி.கே.மாதவன் மட்டுமே. அவரது இருபதாண்டுக்கால பொதுவாழ்க்கையின் சாதனை
அது. அதை சிலநாள் அப்போராட்டத்தில் பங்கெடுத்த ஈவேரா அவர்கள் மேல்
ஏற்றிக்கூறுவது ஈவேராவிற்கே பெருமை சேர்க்காது" என்று கவலைப்படுகிறார்
ஜெயமோகன்.
´சில நாட்கள்´ என்ற சொல்லாடலை கவனியுங்கள்!
வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பெரியார் கேரளத்தில்
´அருவிக்குத்தி´ என்ற ஊரில் 1-மாதம் சிறை தண்டனை அனுபவித்தாரே அதை எந்தக்
கணக்கில் சேர்ப்பது? பல நாட்களாக வைக்கம் முழுவதும் அவற்றைச் சுற்றியுள்ள
கிராமப்புறங்களுக்கும் சென்று தீண்டாமைக்கு எதிராக பெரியார் பேசினாரே
அந்த நாட்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது? மறுபடியும் 6-மாதம் கடுங்காவல்
தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் பெரியார் அடைக்கப்பட்டாரே அதை எந்தக்
கணக்கில் சேர்ப்பது?
போகிற போக்கில் ´சில நாட்கள்´ கணக்கு என்று, விரல் விட்டு கதை சொல்ல இது
என்ன காக்கா வடை தூக்கிக் கொண்டு போன கதையா? அல்லது கற்பனையில்
எழுதப்படும் சிறுகதையா?
தீண்டாமைக்கெதிராக கொதித்தெழுந்த போராளியின் இரத்தம், சதை, எலும்புகளில்
எல்லாம் மனிதநேயத்தை வையடா என்று போராடியும், ´கீழ்ச் சாதி மக்களான நாம்
உள்ளே தெருவில் போவதால் தீட்டுபட்டு விடும் என்று சொல்லும்
வைக்கத்தப்பனைப் குப்புற போட்டு வேட்டி துவைக்கணும்´ என்று கடவுளையே
குப்புறத்தள்ளி மனிதநேயத்தை அதன் மீது வைத்த பெரியாரை அவதூறு செய்ய
ஜெயமோகனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
´Conspiracy of Silence´ என்பார்கள். மெளனத்தின் மூலம் இருட்டிக்கும்
சதித் திட்டம். இன்னொன்று, வரலாற்றை திரித்து எழுதி வரலாற்று நிகழ்வுகளை
இளைய தலைமுறையினரிடம் திரித்து குழப்பி விடுவது. இந்த வேலையைத்தான்
தூக்கிப்போட்டுக் கொண்டு செய்கிறார் ஜெயமோகன்.
பெரியார் சிறையில் இருந்த போது அதே சிறையில் வேறு தனியறையில்
அடைக்கப்பட்டிருந்த கே.பி. கேசவமேனன் சிறையில் பெரியார் அனுபவித்த
துன்பத்தைப் பற்றி பின்னாளில் மலையாளத்தில் ´தன் வரலாறு´ என்னும் நூலில்
108-வது பக்கத்தில் நினைவு கூறுகிறார்.[5]
ஜெயமோகனின் அடுத்த வில்லத்தனத்தை பாருங்கள்:
"காந்தியின் நோக்கம் என்ன என்று வரலாற்றை ஒட்டுமொத்தமாக இன்று பார்க்கும்
வரலாற்றாசிரியர்கள் தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள். உயர்சாதிக்கு எதிராக
தாழ்ந்த சாதியினரைத் தூண்டிவிடுவதாக போராட்டம் ஆகிவிடலாகாது என அவர்
எண்ணினார். அவரது திட்டம் உயர்சாதியினர் உள்ளிட்ட அனைத்து இந்துக்களிலும்
சாதிக்கொடுமைகள் மற்றும் தீண்டாமை குறித்த விழிப்பை உருவாக்குவதே.
அதற்காக ஒரு பிரச்சாரக்கருவாகவே அவர் வைக்கத்தை அணுகினார். அங்கே செய்து
பார்த்ததை அவர் இந்தியா முழுக்க பின்னர் விரிவுபடுத்தினார்."
வைக்கம் போராட்டத்தைக் குறித்து காந்தி பின்னாளில் எதை
விரிவுபடுத்தினார்? எப்படி விரிவுபடுத்தினார்? என்பதையும் வாசகர்கள்
கவனிக்க வேண்டும்.
வைக்கம் போராட்டம் நிறைவடைந்த 5-வருடங்களுக்கு பின் 1932-இல் ஜனவரி 30-
ஆம் தேதி அன்று தனது சொந்த பத்திரிகையான ´யங் இண்டியா´வில் காந்தி
எழுதுகிறார்:
"ஜார்ஜ் ஜோசப் கிறித்துவர். இது "இந்து" மதப்பிரச்சனை. ஆகவே, அவர் இதில்
ஈடுபடக்கூடாது" என்று சொன்னேன். "கோவில் நுழைவு என்பது உரிமை. ஆகையால்,
இதில் வேறு யாரும் (மற்ற மதக்காரர்கள்) நுழைவது சத்தியாக்கிரகம் என்று
சொல்ல முடியாது. வைக்கம் சத்தியாக்கிரக காலத்தில், ஜார்ஜ் ஜோசப்
சிறைக்குச் சென்றபொழுது அவர் செய்தது தவறு என்று நான் சொல்லியனுப்பினேன்.
நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டு உடனே மன்னிப்புக் கேட்டுக் கொண்டு
ஜெயிலிலிருந்து வெளியே வந்தார். கோயில் நுழைவு சத்தியாக்கிரகம் என்பது
சாதி இந்துக்களுக்கு ஒரு "தபசு" போன்றது."
மேற்கூறிய காந்தியின் எழுத்துக்களைக் கண்டு ஜார்ஜ் ஜோசப் அதிர்ச்சி
அடைந்தார். காரணம் என்ன என்கிறீர்களா?
இதோ ஜார்ஜ் ஜோசப் மறுப்புத் தெரிவித்து எழுதிய கடிதம்[6] [அதே ´யங்
இண்டியா´வில் பிரசுரிக்கப்பட்டது]
"வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கும் கோயில் நுழைவிற்கும் சம்பந்தம்
கிடையாது. பொதுப் பணத்தால் நிர்வகிக்க கூடிய ஒரு பொதுத் தெருவில்
"தீண்டத்தகாத" மக்கள் நடப்பதற்கு உரிமையில்லை என்று சொல்வது எப்படிச்
சரியாக இருக்கும் என்பது மட்டுமே அப்பிரச்சினை. அந்தத் தெரு கோயிலுக்கு
அருகாமையில் இருந்தது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. உண்மையில், அதிக
அளவில் திரும்பத் திரும்ப நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.
கோயிலுக்குள் செல்வதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று. நாங்கள்
போராடியது சிவிக் உரிமைக்காக மட்டுமே! போராட்டம் நீண்ட நாள் நீடித்தாலும்
தீண்டப்படாதவர்களுக்குத் தான் இறுதி வெற்றி கிடைத்தது.
நான் ஒரு கிறித்தவன் என்பதால் அந்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று
காந்தி சொன்னது உண்மை. நான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று
சொல்லியனுப்பியதும் உண்மை. ஆனால், தான் மன்னிப்புக் கேட்கவில்லை"
சத்தியத்தை பேசுபவரும் மகாத்மாவாகவும் கருதப்பட்ட காந்தியின் யோக்கியதையை
பார்த்தீர்களா?
தீண்டாமைக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டத்தை காந்தியே புரட்டி பேசிக்
கொண்டிருக்கும் போது ஜெயமோகன் போன்ற இந்துத்துவவாதி புரட்டிப் பேச
சொல்லித்தர வேண்டுமா? இந்த லட்சணத்தில் வைக்கம் போராட்டத்தை இந்தியா
முழுவதும் பரப்புரை செய்தாராம் காந்தி. எப்படி செய்தார்?
"நாம் இந்துக்கள். நம் பிரச்சனைக்குள் வேற்று மதக்காரர்களும்,
ஆங்கிலேயர்களும் உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடும் என்று சொன்னவரிடம் எங்கே
மனிதம் இருந்தது?
வைக்கம் போராட்டம் நடந்த காலக்கட்டத்தில் காந்தியின் கண்கள் காட்சிகளை
மதக்கண் கொண்டு பார்த்ததே தவிர மனிதக்கண் கொண்டு காட்சிகளைப் பார்க்கத்
தவறிவிட்டது.
அதனால் தான் வைக்கம் போராட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது
[1924-1925] ஜார்ஜ் ஜோசப் அவர்களை கிறிஸ்தவ மதத்தைச் சேர்த்தவர் என்பதை
காரணம் காட்டி வைக்கம் போராட்டம் இந்து மதப்பிரச்சனை என்றும் அதில்
தலையிட வேண்டாம் என்றும் காந்தியால் கடிதம் எழுத முடிந்தது.
"காந்தியின் நோக்கம் என்ன என்று வரலாற்றை ஒட்டுமொத்தமாக இன்று பார்க்கும்
வரலாற்றாசிரியர்கள் தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள் என்கிறார் ஜெயமோகன்.
எந்த வரலாற்று ஆசிரியர்கள் என்ற பெயர்களும் குறிப்பில் காணவில்லை.
இருப்பினும் வைக்கம் போராட்டத்தைப்பற்றி ஆய்வு செய்த வரலாற்று
ஆசிரியர்களில் மிக முக்கியமானவர் டாக்டர். டி.கே. ரவீந்திரன். இவர்
கேரளத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப்
பேராசிரியாக பணி புரிகிறார். "Vaikkam Satyagraha and Gandhi" என்ற நூலை
டாக்டர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
முதன் முதலில் டாக்டர் டி.கே.ரவீந்திரன் இந்நூலை வெளியிட்ட போது, ஆய்வு
செய்த தலைப்பையே நூலுக்கும் வைத்தார். அதே நூல் இரண்டாம் பதிப்பாக
வந்தபோது ´Hundred yards to Freedom´ [´சுதந்திரத்திற்கு நூறு கெஜ தூரம்
´] என்று புத்தகத்தின் தலைப்பை மாற்றினார்.
டாக்டர். டி.கே. ரவீந்திரன் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் இல்லை.
வைக்கம் போராட்டத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களில் முதன்மையானவர்.
இவர் ஆய்வுக்குட்படுத்திய ஆவணங்கள் திருவனந்தபுர அரசாங்கத்தினுடைய
ஆவணக்காப்பகத்தில் [Record Office] இருக்கிறது.
பெரியார் வைக்கம் போராட்டத்தில் தீவிரமாக இயங்கியது குறித்து ஊடகத்தில்
ஆதாரங்கள் எதுவும் இல்லை என்கிறார் ஜெயமோகன். கேரள அரசாங்கத்தில் அனைத்து
ஆவணங்களும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மறுபடியும் வைக்கம் போராட்டத்திற்கு செல்வோம்.
டாக்டர். டி.கே. ரவீந்திரன் திருவனந்தபுர அரசாங்கத்தினுடைய
ஆவணக்காப்பகத்தில் இருந்த செய்திகளை தான் ஆய்வு செய்து வெளிட்ட நூலில்
குறிப்பிட்டிருக்கிறார். அதில் காந்தியார் குறித்த ஓர் செய்தி.
பாரிஸ்டர் கே.பி. கேசவமேனன் அவர்கள் வைக்கத்திலே போராடுவது என்று ஒரு
நிலையை எடுத்து அதற்கான முயற்சிகளை தொடங்கியபோது - காந்தியார் கே.பி.
கேசவமேனனிடம் போராட்டத்தை நிறுத்தி வைக்கும்படி சொல்கிறார். காரணம்
வைக்கத்தில் இருக்கின்ற வைதீகர்கள் காந்தியாரிடம் போராட்டத்தை நிறுத்தி
வைக்கம்படி கோரிக்கை வைத்திருந்தார்கள்.
காந்தி எழுதிய கடிதம் கே.பி. கேசவமேனனுக்கு கிடைக்கும் முன்பே அந்தச்
செய்தி இந்துப் பத்திரிகையில் காந்தியின் கடிதம்
பிரசுரிக்கப்பட்டுவிட்டது.
கே.பி. கேசவமேனன் அச்செய்தியை "இந்து" பத்திரிகையில் படித்துவிட்டு உண்மை
நிலை காந்திக்கு சரியாகத் தெரியாத காரணத்தால் தான் போராட்டத்தை நிறுத்தச்
சொல்லி தந்தி கொடுத்திருக்கிறார் என நினைத்து காந்திக்கு அவசரமாக ஓர்
தந்தியை 1924- 6, ஏப்ரல் அன்று அனுப்புகிறார். அத்தந்தியில் காணப்படும்
வாசகங்கள் படித்துபாருங்கள்.[7]
கே.பி. கேசவமேனனின் விளக்கத்திற்கு காந்தி முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதேபோல் போராட்டத்தில் கே.பி.கேசவமேனனும் கைது செய்யப்பட்டார்.
இப்படி வைக்கம் போராட்டத்தில் தொடக்க நிலையிலும் இடைப்பட்ட நிலையிலும்
காந்தி வில்லங்கம் பிடித்த வேளைகளையே செய்துக் கொண்டிருந்தார்.
காந்தி மதப்பற்றும், சாதிபற்றும் மிக்கவர் என்பது அவரது வார்த்தைகளை
படிப்பவர்களுக்கு மிக நன்றாக உணரமுடியும். தனது இளைமை காலத்திலும் பொது
வாழ்க்கையில் இருந்த போதும் மனித உரிமைகளுக்காக காந்தி போராடியது இல்லை.
குறிப்பாக தீண்டாமையைக் குறித்து காந்தி கொண்டிருந்த கருத்து மனித
நேயத்திற்கு எதிரானது.
காந்தி தனது கடைசி காலத்தில் தான் சாதி ஒழியவேண்டும் என்று பேச
ஆரம்பித்தார். அப்படி பேச ஆரம்பித்த 12-வது நாளில் நாதுராம் கோட்சே என்ற
பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1924-இல் தீண்டாமைக்கு எதிராக வைக்கம் போராட்டம் தொடங்கிய போது
டி.கே.மாதவனை ஆசிர்வதித்ததாக ஜெயமோகன் எழுதுகிறார். இதற்கு ஆதாரங்கள்
காட்டப்படவில்லை.
1924-இல் காந்தி தீண்டாமை குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை
சுட்டிக்காட்டுவதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன.
ஜெயமோகனோ வைக்கம் போராட்டம் குறித்து கேரளத்தில் வெளிவந்த அக்காலத்தைய
நாளிதழ் ஆவணங்களில் அனேகமாக எங்குமே ஈவேராவின் பெயர் காணப்படவில்லை
என்கிறார். இலக்கிய வட்டத்தில் இருப்பவருக்கு அந்நாளில் இந்தியாவில்
ஊடகத்துறை யாருடைய கைகளுக்குள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு செய்திகளை
தேர்வு போடும் அனுமதிகளை வைத்திருந்திருக்கிறது என்பதை அறியாதவரா?
இதே நேரத்தில் இன்னொரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். ´குடிஅரசு´ நாளிதழ்
உருவாக்கப்பட்டதன் நோக்கம் 1924-வருடங்களுக்கு முன் பத்திரிகைகளில்
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. எல்லாத்துறைகளிலும்
பார்ப்பனர்களையே ஆதரித்து பத்திரிகைளில் செய்திகள் வந்தன. வைக்கம்
சத்தியாக்கிரகத்திலும், பார்பபனல்லாதாரின் கருத்துகளைப் பற்றிய உண்மைச்
செய்திகளை வெளியிடுவதே இல்லை.
பார்ப்னரல்லாதார் இயக்கத்தின் பேரால் நடைபெற்று வந்த ஆங்கில தினசரி
"ஜஸ்டிஸ்" பத்திரிக்கையும், தமிழ் தினசரி "திராவிடன்" பத்திரிக்கையும்
செல்வாக்கில்லாமல் இருந்தன. ஆதலால், பார்ப்பனரல்லாதார் நன்மையைப்
பாதுகாக்க ஒரு தனிப்பத்திரிக்கை வேண்டும் என்கின்ற எண்ணம் பெரியாருக்கு
ஏற்பட்டது. 02.05.1925-இல் ´குடிஅரசு´ என்று வாரப் பத்திரிகையாக
ஈரோட்டில் பெரியார் தொடங்கினார்.
"அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தாலும் அவைகள் தங்கள்
மனசாட்சிக்கு உண்மையென்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால் தான்
நான் இப்பத்திரிக்கையை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிக்கையைப் போல்
இல்லாமல், மனத்தில் பட்டதைத் தைரியமாய்ப் பொது ஜனங்களுக்கு உள்ளது
உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்." என்று அப்போது
பெரியார் கருத்து தெரிவித்திருந்தார்.
மற்றொரு சம்பவமும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
தமிழக அரசாங்கம் கேரளத்தில் பெரியார் வைக்கம் போராட்டத்தில்
ஈடுபட்டதற்காக பல நெருக்கடி கொடுத்தது என்பதற்கு உதாரணம்:
11.09.1924- அன்று வைக்கத்தில் இருந்து முக்கிய வேலையாக பெரியார் ஈரோடு
வருகையில் கைது செய்யப்பட்டார். அதற்கு தமிழக அரசு கூறிய காரணம்
அச்சம்பவம் நடைபெறுவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பு பெரியார் கதர்
பிரசாரம் செய்து பேசியபோது அரசாங்கத்தை கடுமையாக பேசியதற்காக தற்போது
கைது செய்கிறோம் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டது. பெரியார் மீது
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அரசு வெறுப்பு, வகுப்பு வெறுப்புக்
குற்றத்தின் கீழ் 124-யு, 153-யு செக்ஷன்களின்படி கைது செய்யப்பட்டு
சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிலநாட்கள் சிறையில் இருந்தார்.
தமிழக அரசாங்கத்தின் முக்கிய நோக்கமே பெரியார் மறுபடியும் திருவாங்கூர்
சென்று வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக சென்னை
மாகாணத்தில் சட்ட மந்திரியாக இருந்த ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர் அவர்களின்
திட்டமிட்ட சதியாக இருந்தது. இதற்கு தூண்டுதலாக இருந்தவர் திருவாங்கூர்
திவானாக இருந்த ராகவய்யா. பெரியார் மீது சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டு
நியாயமற்ற முறையில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் சில
நாட்களில் தமிழக அரசே வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது. இவ்வழக்கு
முடிவதற்குள் வைக்கத்தில் தெருவை எல்லோரும் திறந்து விட வேண்டுமென்று
சர்க்காரே தீர்மானித்து அதற்குள் வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள்.
இப்படி பல நெருக்கடிகளையும் சிறை தண்டனையும் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து
தீண்டாமைக்கு எதிராக போராடிய பெரியாரை அவதூறு பேசுவது இன்றல்ல....
வைக்கம் போராட்டம் நிறைவடைந்த உடனே ஆரமாகிவிட்டது. காந்தியை ஹீரோவாக்கும்
முயற்சியும் வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் காந்தியே என்றும்
பரப்புரை தொடங்கிவிட்டது.
அவை குறித்தும் எழுதுவதென்றால் ஒரு புத்தகமே எழுத வேண்டியதிருக்கும்
என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.
கடைசியாக கேவலமான ஒர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் ஜெயமோகன். அதாவது,
1924-இல் தமிழகத்தில் அரசியலில் செல்வாக்கு இல்லாதவராகவும் தொண்டர் படை
இல்லாதவராகவும் பெரியார் இருந்தார் என்பதே.
இவையும் மிகத் தவறான வாதமாகும்.
கேரளத்தில் டி.கே.மாதவன் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவி வகித்தார்
என்பதை தூக்கி பிடிக்கும் ஜெயமோகன் அதே காங்கிரஸ் தலைமை பதவியைதான்
பெரியாரும் தமிழ்நாட்டில் வகித்தார் என்றிருக்கும் போது எப்படி அரசியல்
பலம் இல்லாதவராக பெரியார் இருக்க முடியும்? எப்படி தொண்டர்கள் இல்லாமல்
இருக்க முடியும்?
1924- ஏப்ரல் 14-அன்று வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு
பெரியார் என்னென்ன பதவிகள் வகித்தார் என்பதையும், என்னென்ன
போராட்டங்களில் ஈடுபட்டார் என்பதையும் வரலாறுகள் சொல்கின்றன.
டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ள ´What congress and Ganthi have done to
untouchables´ ("காங்கிரசும், காந்தியும் தீண்டாதவர்களுக்குச் செய்தது
என்ன?") என்னும் நூலில் காந்தி தீண்டாதார் என்ற மக்களுக்கும்,
ஆதித்திராவிட மக்களுக்கும் ஒடிந்த ஊசியளவுக்குக்கூட அவர்களது இழிவு
நீங்கப்பாடு படவில்லை என்பதை பல ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி
இருக்கிறார். காந்தியை மறுவாசிப்பு செய்ய விரும்புபவர்கள் அவசியம் படிக்க
வேண்டிய நூல்.
காந்தி தீண்டாமையை ஒழிக்க ஆர்வம் காட்டியதில்லை என்பதற்கு ஏராளமான
ஆதாரங்கள் வரலாறில் இருக்கின்றன. ஜெயமோகனின் எண்ணம் முழுவதும் பெரியாரை
அவதூறு செய்து எழுத வேண்டும் என்ற நோக்கத்துடனே செயல்பட்டிருப்பதால்
பெரியாரையும், வைக்கம் போராட்ட வரலாற்றை திரித்து எழுத ஜெயமோகனுக்கு என்ன
அசட்டு துணிச்சல் வந்திருக்கிறது என்பதும், அறிவுஜீவின் ஆய்வு எந்த
லட்சணத்தில் இருக்கிறது என்பதை வாசகர்களிடம் அம்பலப்படுத்தவும், அதேநேரம்
உண்மை நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டவுமே சம்பவங்களை ஆதாரங்களோடு
அம்பலப்படுத்தி இருக்கிறோம்.
தமிழச்சி
31.01.2010
தொடர்புடைய இணைப்புகள்:
- பெரியார் குறித்து பாரிஸ்டர் திரு. கே.பி.கேசவமேனன்[5]
http://ow.ly/11buv
- ஜார்ஜ் ஜோசப் மறுப்புத் தெரிவித்து எழுதிய கடிதம்[6]
[இந்த இணைப்பில் 37,38,39,40,41-பக்கங்களில் உள்ளன]
http://ow.ly/11boU
- TELEGRAM TO THE MAHATMA[7]
http://ow.ly/11bH4
- வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடமும், போராளிகளும் [வீடியோ காட்சி]
http://ow.ly/12kIx
- வைக்கம் வெற்றிக் கொண்டாட்டம்!
http://ow.ly/11bnH
- வைக்கம் வரலாறு! [இந்த இணைப்பு சிறு நூல்]
http://ow.ly/11boU
- பெரியார் குறித்து அறிஞர்கள் கருத்து!
http://ow.ly/11bxF
- 1973-இல் வானொலியில் வைக்கம் போராட்டம் குறித்து பெரியார் பேசியவை!
http://ow.ly/11RR0
- பெரியார் குறித்து எழுத்தாளரான வ.ராமசாமி அய்யங்கார்
http://ow.ly/11goN
- காந்தி செய்த வஞ்சகத்தால் பார்ப்பானுக்கு அடிமையானோம்!
http://ow.ly/11bDv
- பார்ப்பான் தானுயர வகுத்த வருணபேத சாதிகளை ஒழிப்போம்
http://ow.ly/11bB4
- காந்தியாரும் ஜாதி ஒழியும்; ஒழிய வேண்டும் என்கிறார்!
http://ow.ly/11gqb
- காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன?
http://ow.ly/11gwU
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=1900
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment