Tuesday, February 2, 2010

[தமிழமுதம்] அறிவுஜீவி ஜெயமோகனின் வைக்கம் ஆய்வு - 1

"மனிதகுல வரலாற்றில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மைகளை மட்டுமே
எடுத்துரைத்து தொகுக்கப்பட்ட வரலாறுகள் என்பது, எப்போதுமே உண்மையாய்
இருப்பதில்லை. வரலாற்றை யார் யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து
உண்மைகள் மாறுபடுகின்றன" என்று ஹங்கேரிய சிந்தனையாளர் மான்ஹீம் கூறியது
ஜெயமோகன் எழுதிய வைக்கம் கட்டுரையை வாசித்த போது எம் நினைவுக்கு வந்தது.

உண்மைக்கு முரண்பாடான அவதூறு கட்டுரையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுத[1] யார்
அதிகாரம் கொடுத்தது?

"எவன் கொடுப்பது அதிகாரம்! எழுதுவது என் எழுத்து உரிமை" என்றால்,
வரலாற்று நிகழ்வுகளை குறித்து கட்டுரைகள் எழுதும்போது குறைந்தபட்சம்
ஆதாரங்களுடனாவது எழுதுவதுதான் எழுத்தாளனுக்கு மரியாதை.

இந்திய வரலாற்றில் முக்கிய சம்பவமாக கருதப்படும் வைக்கம் போராட்டத்தற்கு
என்று வரலாறுகள் இருக்கிறது. அதனூடாக கட்டுரைகள் எழுதப்பட்டிருக்க
வேண்டுமே தவிர, வைக்கம் போராட்டத்திற்கு சம்பந்தப்படாத ´ஆலய நுழைவு´
போராட்டத்தை வைக்கம் போராட்டத்தோடு இணைத்து குளறுபடி கட்டுரையை
எழுதிவிட்டு,

"காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள்
அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை
உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும்" என்று எக்காளமிடக்
கூடாது.

வரலாற்று நிகழ்வுகளோடு யார் வேண்டுமானாலும் கருத்துக்களை தொகுக்கட்டும்.
அதற்கான எதிர்வினைகளுக்கு எப்போதுமே கருஞ்சட்டைகள் வரலாற்று ஆதாரங்களுடன்
தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் வரலாற்றை திரிக்காமல் தொகுப்பதில் எத்தனை
பேரிடம் நேர்மை இருக்கிறது?

இதோ ஜெயமோகனை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

"வைக்கம் வீரர் என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் அது டி.கே.மாதவன்
மட்டுமே. வைக்கம் போராட்டம் மட்டுமல்ல, இந்தியாவின் ஆலய நுழைவுப் போராட்ட
இயக்கத்தின் தொடக்கப்புள்ளியே அவர்தான்" என்கிறார்.

1918-இல் டி.கே. மாதவன் திருவிதாங்கூரின் சட்டசபையான ஸ்ரீமூலம் சபைக்கு
ஈழவர் பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டும், அதன்பின் காங்கிரஸ்
உறுப்பினரும் தலைவரும் ஆகி காந்தியைச் சந்தித்து அவரது வழிகாட்டுதலுடன்
வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்ததாகவும், அதற்கு முன்பே அதாவது, 1916-இல்
'ஷேத்ரபிரவேசம்' என்று ஆலயப்பிரவேசத்தைப் பற்றி ஒரு நூலும்
வெளியிட்டதாகவும், 1916-இல் கல்கத்தாவில் அன்னிபெசண்ட் தலைமையில் நடந்த
பாரதமகாசபா மாநாட்டில் பங்கெடுத்த மாதவன் ஆலயபிரவேசத்தைப் பற்றி ஒரு
தீர்மானம் கொண்டுவரும்படி அன்னிபெசண்டிடம் கோரியதையும், அன்னிபெசண்ட்
அதற்கு ஒத்துக்கொண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாகவும்
குறிப்பிடும் ஜெயமோகன், பெரியாரை தமிழ்நாட்டில் மிகைப்படுத்தி வைக்கம்
வீரராக்கியதாகவும் சாடுகிறார்.

இப்படி சொல்வதற்கு ஜெயமோகன் என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்?

இந்தியாவில் முதன்முதலாக தீண்டாமையை எதிர்த்து நடத்திய போராட்டம் வெற்றி
பெற்றது என்றால் அவை பெரியாரை தலைமையாக ஏற்று வைக்கத்தில் நடத்தப்பட்ட
சத்தியாகிரக போராட்டம் என்பது வரலாற்று செய்தியாகும்.

1924-ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி துவங்கிய இந்த போராட்டம் 1925-நவம்பரில்
முடிவு பெற்றது.

நாம் தற்போது விவாதத்தில் வைத்திருப்பது வைக்கம் போராட்டம் குறித்த
நிகழ்வுகளைப்பற்றியே. அப்படியிருக்கும் போது ஜெயமோகன் டி.கே.மாதவனை
முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆலயப்பிரவேசத்தை இழுத்துக்
கொண்டு வருகிறார்.

ஜெயமோகனுக்கு ஏற்பட்ட குழப்பம் போன்றே காந்தியாருக்கும் அந்நாளில்
வைக்கம் போராட்டம் எதனால் என்பது குறித்து சரியான தெளிவின்மை
இல்லாதிருந்தது.

வைக்கம் போராட்டம் என்பது ஆலயபிரவேச போராட்டமல்ல. தீண்டாமைக்கு எதிரான
போராட்டம் என்பதை தெளிவாக உணர வேண்டும்.

அதேப்போல் தோழர் டி.கே.மாதவன் அவர்களை குறைசொல்ல வேண்டும் என்பது எமது
நோக்கம் அல்ல. பெரியாரை மட்டந்தட்டுவதற்கு ஜெயமோகன் டி.கே.மாதவனை
தூக்கிப் பிடிக்கும் சூழ்ச்சியை வரலாற்று ஆதாரத்துடன் விமர்சிப்பதே எமது
நோக்கமாகும்.

டி.கே.மாதவன் கேரளத்தில் மாவல்லிக்கரைப் பகுதியைச் சார்ந்த தீவிரமான
தொண்டராவார். "டி.கே. மாதவா மெமோரியல் காலேஜ்" என்று ஒரு கல்லூரி இவர்
பெயரில் இயங்குகிறது. டி.கே.மாதவனின் தந்தை பெரியார் மீது மிகுந்த
ஈடுபாடு கொண்டவராக இருந்ததால் இக்கல்லூரி விரிவுபடுத்தப்பட்ட போது
அக்கட்டடத்தை பெரியார் திறந்து வைக்க அழைத்தார்கள். பெரியாரும்
கேரளத்தில் மாவல்லிக்கரையில் இருந்த கல்லூரிக் கட்டடத்தை திறந்து வைக்கச்
சென்றார். இந்நிகழ்வுக்கு கேரளத்தின் முன்னாள் முதலமைச்சரான
திரு.சங்கரவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இவரும் ஈழவச்
சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

கேரளத்தில் 1975-இல் 20-ஏப்ரல் அன்று வைக்கம் போராட்டத்தின் பொன் விழா
சிறப்பாக நடைப்பெற்றபோது, விழாவை தொடக்கி வைத்த அன்றைய பிரதமர் இந்திரா
காந்திக்கு கூட வரவேற்பு வளைத்தில் முக்கியத்துவம் தரப்படவில்லை. வைக்கம்
போராட்ட வீரர்களின் பெயர்களுடன் வளைவுகள் செய்யப்பட்ட போதுகூட முதல்
வளைவில் பெரியாரின் பெயரை வைத்துதான் கேரள அரசு மரியாதை செய்திருந்தது.
அடுத்த வளைவில் தான் டி.கே.மாதவன் வளைவு அமைப்பட்டது. இச்சம்பவம் நடந்தது
தமிழ்நாட்டில் அல்ல. போராட்டம் நடந்த கேரள நாட்டில் பெரியாரின் பெருமைகள்
பேசப்படுகின்றன.
அப்போது பெரியார் இறந்து இரண்டு வருடங்கள். அவர் சார்பாக மணியம்மையாரை
அழைத்து கேரள அரசு கெளரவப்படுத்தியது. மற்றும் போராட்டத்தில் கலந்து
கொண்ட கே.பி.கேசவமேனன், குரூர் என்.நம்பூதிரிபாத், ராஜ கோபாலாச்சாரியார்,
மாஸ்டர் தாராசிங் உள்பட அனைவரையும் கேரள அரசு கெளரவித்தது. இதில்
கே.பி.கேசவமேனன் உடல்நிலை சரியில்லாததால் கலந்து கொள்ள முடியவில்லை.
அப்போது அவரது வயது 89.

ஆனால் ஜெயமோகனோ, "ஈ.வே.ரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது
குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச் சிரிப்புடன்தான்
எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும்
ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை" என்கிறார்.

கேரளத்தில் ஈழவர் தோழர்கள் பெரியாரைக் குறித்து கூறிய மதிப்புரைகளை
எழுதத்தொடங்கினால் இக்கட்டுரை முழுவதும் பெரியார் புகழ் பாடும்
கட்டுரையாக திசைமாறி விடக்கூடும் என்பதால் ஓர் உதாரணத்தை மட்டும் இங்கே
பதிவு செய்கிறோம்.

1930- ஜீலையில் S.N.D.P. யோகமென்ற ஈழவர் சங்கத்தின் காரியதரசியுமாகிய
திரு.எம்.கோவிந்தன் சொல்கிறார்:

"கோட்டயத்தில் நடைபெற்ற S.N.D.P. மாநாட்டில் பத்தாயிரத்துக்கு அதிகமான
மக்களுக்கு பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப்பற்றிச் செய்த
சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு மிக எளியதாகவும் இருந்தது. அவரது
வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை உணர்வோடு வந்தது. மிக்க
கவனத்துடன் மக்கள் கேட்டனர். எனது நாட்டில் (மலையாளம்) சுயமரியாதை
விதைகள் முளை கண்டிருந்தவை இவரால் போஷிக்கப்பட்டன. மிகுந்த விளைவு
கட்டாயம் ஏற்படும்."

திரு.எம்.கோவிந்தன் பெரியார் குறித்து பேசியது நமட்டுச் சிரிப்பாக
தெரிகிறது என்றால் அப்படி சொல்பவர்கள் புத்திபேதலித்தவர்களாகத்தான்
இருக்கக்கூடும்.

இனி விவாதத்திற்கு செல்வோம்.

ஜெயமோகனின் முதல் புரட்டுவாதம் டி.கே.மாதவன் நீண்ட காலமாக வைக்கம்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், ஈழவர்களின் தலைவர்களில் ஒருவராக
இருந்த பி.கெ.குஞ்சராமன் ஈழவர்கள் உடனடியாக மதம் மாறவேண்டும்
என்றதாகவும், அதன் தொடர்ச்சியாக சிறு ஈழவக் குழு பஞ்சாப்புக்குச் சென்று
சீக்கிய மத்தில் சேர்ந்ததும் இதைக் கண்டு இஸ்லாம் கிறிஸ்தவ மதங்களும்
ஈழவர்களை தங்களுடைய மதத்தில் இணையும்படி வைக்கத்தில் பிரசாரம்
செய்ததாகவும், அந்தச் சந்தர்ப்பத்தில் தான் பெரியார் தன் மனைவி
நாகம்மையாருடன் 1924- ஏப்ரல் 14, அன்று வைக்கம் போராட்டத்தில் கலந்து
கொண்டார் என்கிறார் ஜெயமோகன்.

இச்செய்தி உண்மையல்ல...

ஈழவர் சமுகத்தைச் சேர்ந்த மாதவன் என்ற வழக்கறிஞர் ஓர் வழக்குக்காக
ஆஜராகுவதற்காக வைக்கம் கோயில் தெரு வழியாக செல்ல முயன்ற போது
தடுக்கப்பட்டார். இச்சம்பவம்தான் வைக்கம் போராட்டம் நடக்க முக்கிய
நிகழ்ச்சியானது. இச்சம்பவத்தை மையப்படுத்தியே வக்கீல் மாதவன்,
டி.கே.மாதவன், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.பி. கேசவமேனன், ஜார்ஜ்
ஜோசப் உட்பட மேலும் சிலர் இணைந்து போராட முடிவெடுத்தனர்.
இப்போராட்டத்திற்கு டி.கே.மதவன் காந்தியின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பித்தார்
என்கிறார் ஜெயமோகன்.

இவையும் உண்மையல்ல...

ஏனெனில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே வக்கீல் மாதவன்,
பாரிஸ்டர் கேசவமேனன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப் உட்பட 19-பேர் கைது
செய்யப்பட்டனர். திருவாங்கூர் அரசரின் உத்தரவின் பேரில் இவை நடந்தது.
தினசரி ஒருவர் வீதம் கைது செய்து அவர்களை மாத்திரம் தனிப்பட்ட முறையில்
ஸ்பெஷல் கைதிகளாக நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போராட்டம் மேற்கொண்டு தொடர தலைமை இல்லாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட
போராட்டம் முடிந்துவிடும் நிலையில் இருந்த போது சிறையில் இருந்த ஜார்ஜ்
ஜோசப், கே.பி.கேசவமேனன் என இருவரும் இணைந்து பெரியாரிடம் தீண்டாமைக்கு
எதிரான போராட்டத்தை தொடர உதவும்படி கோரி இருவரும் கையெழுத்திட்ட கடிதத்தை
ஈரோட்டிற்கு இரகசியமாக அனுப்பினார்கள்.

அப்போது பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தலைவராக இருந்தார்.
குளித்தலையில் அரசியல் மாநாட்டில் இருந்தபடி மதுரை ஜில்லாவை சுற்றியுள்ள
பகுதிகளில் பிரசாரத்தில் இருந்தார். மதுரையில் உள்ள பண்ணைபுரம் என்ற
கிராமத்தில் மேடையில் பெரியார் பேசிக்கொண்டிருந்த போது கடிதம்
கொடுக்கப்பட்டது.

செய்தி அறிந்ததும் உடனடியான ஈரோடுக்கு சென்று தேவையான உடைகளை எடுத்துக்
கொண்டு தான் வரும்வரையில் தலைமைப் பதவியை திரு. ராஜகோபாலாச்சாரியாரை
நிர்வகிக்கும்படி கடிதம் எழுதிவிட்டு துணைக்கு இரண்டு தோழர்களையும்
அழைத்துக் கொண்டு அன்று இரவே பெரியார் புறப்பட்டுவிட்டார். உடன் சென்ற
தோழர்களில் ஒருவர் கோவை சி.அய்யாமுத்து. மற்ற தோழர் எஸ். ராமநாதன்.

மறுநாள் பகல் 2-மணியளவில் வைக்கம் சென்றடைந்த பெரியாரை விஸ்வநாத அய்யர்
தாசில்தாரும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் வரவேற்றதாகவும் அவர்கள்
அனைவரும் அய்யர், அய்யங்கார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்
பெரியார். ´பிட்´ என்பவர் மட்டும் வெள்ளைக்காரர் என்கிறார்.

அவர்கள் அனைவரும் "மகாராஜா அவர்கள் சார்பில் எங்களை வரவேற்று வேண்டிய
எல்லா சவுகரியங்களையும் பண்ணித்தரச் சொன்னார்" என்று சொல்லி
வரவேற்றதாகவும் பெரியார் குறிப்பிட்டது வரலாற்று செய்தி.
அன்றே போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். *
[ஆதாரம்: ´தமிழர் தலைவர்´ என்ற நூல், பக்கம்:70,71,72]

மேலும் வைக்கம் போராட்டம் குறித்து பெரியாரே பேசியதை பாருங்கள்.[2]
*[சிறுகுறிப்பு: 1959-இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியார்
சுற்றுப்பயணம் செய்தார். அப்படிச் சுற்றுப்பயணம் சென்று அந்த
மாவட்டத்திலே பிரச்சாரம் செய்தபோது பக்கத்தில் திருவனந்தபுரம்,
திருவாங்கூர் இருக்கின்ற காரணத்தால், வைக்கத்திலே நடந்த மனித உரிமைப்
போராட்டத்தைப் பற்றி பெரியார் சொற்பொழிவு செய்தார். இச்சொற்பொழிவு 1961-
இல் "தீண்டாமையை ஒழித்தது யார்?" [வைக்கம் போராட்ட வரலாறு] என்ற
தலைப்பில் சிறு நூலாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பாக 1968-லும்
வெளிவந்திருக்கிறது]

ஜெயமோகன் கூற்றுப்படி நாகம்மையார் 1924-ஏப்ரல் 14-இல், பெரியாரோடு
வைக்கம் செல்லவில்லை. தோழர் கோவை சி.அய்யாமுத்துவும், தோழர் எஸ்.ராமநாதன்
உடன் சென்றனர் என்பதற்கான ஆதாரம் இவை. பெரியாருக்கு 1-மாதம் சிறை தண்டனை
கிடைத்து சிறையில் இருந்தபோது தான் நாகையம்மையாரும், பெரியாரின் சகோதரி
எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் வைக்கம் போராட்டத்திற்கு வந்தனர்.

மேலும் ஜெயமோகன் தன்னுடைய அவதூறு கட்டுரையில் ஜார்ஜ் ஜோசப், கே.பி.
கேசவமேனன் இணைந்து எழுதி கையொப்பமிட்ட கடிதத்தில் உள்ள செய்தியை
திட்டமிட்டே மறைத்திருக்கிறார்.

வைக்கம் போராட்டம் தொடர்வதற்கு பெரியாரின் வரவு முக்கியமானதும், அதற்கு
பிறகே போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது என்பதும் வரலாறுகளில் பதிவான
செய்தி.

இங்கும் வரலாற்று ஆதாரம் ஒன்றை சுட்டி காட்டுகிறோம்.

1924-ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னை அரசின் தலைமைச் செயலாளருக்கு C.W.E.
Collon Esq. C.T.E.I.C.S. என்ற வெள்ளை அதிகாரி வைக்கம் போராட்டத்தைப்
பற்றி நேரில் வந்து கண்டு தகவல் சேகரித்துக் கடிதம் எழுதுகிறார். இவர்
கவர்னர் ஜெனரலின் ஏஜென்ட் பதவியில் இருந்தவர். நிலைமைகளை நேரில் சென்று
ஆய்வு நடத்திவிட்டு அவர் எழுதிய அதிகாரபூர்வமான கடிதம்[3]

*[இச்செய்தி திருவனந்தபுர அரசாங்கத்தினுடைய ஆவணக்காப்பகத்தில் இருந்து
எடுத்தாளப்பட்டது]

C.W.E.Collon Esq. C.T.E.I.C.S. கடிதத்தில், "சமீபத்திய செய்தி
திரு.பெருமாள் நாயுடு திரு.ராமசாமி நாயக்கரை சத்தியாகிரகத்
தலைமையகத்திற்குத் தளபதியாக (O.C.) பொறுப்பேற்கச் செய்திருக்கிறார்"
என்று நேரடியாக போராட்டக்களத்தில் உளவு பார்த்துவிட்டு தமிழக அரசுக்கு
கடிதம் எழுதும் வெள்ளை அதிகாரியின் செய்தியை பாருங்கள்.

பெரியார் வைக்கம் போராட்டத்தில் தலைமை வகித்து இருக்கிறார் என்பதற்கு
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

ஆனால் ஜெயமோகனோ என்ன சொல்கிறார் என்பதை அவருடைய பாஷையிலேயே வாசியுங்கள்.

"அரசு வைக்கம் சாலைக்கு குறுக்கே தட்டுப்புச் சட்டகங்கள் அமைத்து
விட்டிருந்தது. அந்த சட்டகங்களை கடக்க முனைந்த அத்தனை பேரும் கைது
செய்யப்பட்டார்கள். போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி
அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர்
மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதப்படவில்லை."

இது எப்படி இருக்கு?

நல்லவேளையாக வைக்கம் போராட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சாலை ஓரத்தில்
நின்றிருந்த பெரியாரையும் கைது செய்தார்கள் என்று எழுதாமல் விட்டாரே!

வைக்கம் போராட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது வைக்கத்தில் தன் மாமா
வீட்டில் தங்கியிருந்த காமராஜர் நேரில் இப்போராட்டத்தை பார்த்தவர்.
அப்போது காமராஜர் சிறுவனாக இருந்தார். அவர் வைக்கம் போராட்டத்தை பற்றி
குறிப்பிட்டதையும் இங்கே பதிவு செய்கிறோம்.[4]

ஓர் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர் எப்படி அப்போராட்டத்திற்கும்
அவருக்கும் தொடர்பு இல்லாமல் போகக்கூடும் என்பது எமக்கு விளங்கவில்லை.
அப்படி கூறுவதற்கான ஆதாரங்களும் இல்லாமல் எப்படி ஜெயமோகனால் பேச
முடிகிறது?

அடுத்த அவதூறு குற்றச்சாட்டை கவனிப்போம்...

தொடரும்....

தமிழச்சி
31.01.2010

தொடர்புடைய இணைப்புகள்:

- ஜெயமோகனின் வைக்கம் போராட்டம் கட்டுரைகள்[1]
வைக்கமும் காந்தியும் 1
http://www.jeyamohan.in/?p=5789
வைக்கமும் காந்தியும் 2
http://www.jeyamohan.in/?p=5792
- தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் பற்றிப் பேசுகிறார்![2]
http://ow.ly/122Ar
- C.W.E. Collon Esq. C.T.E.I.C.S.[3]
[இந்த இணைப்பில் 29,30,31,32,33 பக்கங்களில் உள்ளன]
http://ow.ly/1281C
- வைக்கம் போராட்டம் குறித்து காமராஜர்[4]
http://ow.ly/11bso

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=1898

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment