ஆர்யா எனது நீண்ட நாள் நண்பன். எதேச்சையாக அவனுடைய இந்த குறிப்புகள் அடங்கிய டைரி எனக்கு திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலுக்கு செல்லும் பாதையோர பழைய புத்தக கடையில் கிடைத்தது, ஜெயகாந்ந்தன், அசோகமித்ரன், சு.ரா போன்ற நாவல்களை இருக்கா என்று நான் தேடப்போகவில்லை என்றாலும், எனது நண்பருடன் அந்த கூட்டத்தில் கலந்து புத்தகங்களை தேடலானேன். அங்கே ஏற்கனவே புத்தகத்தை தேடிக்கொண்டிருந்த பெண்ணை நான் கவனிக்கவில்லை என்றால் அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லை. புத்தகத்தை தேட என்னை இழுத்ததே அவளின் அந்த வெண்ணிற சல்வார் என்பதே ஜமுக்காளத்தில் வடிகட்டிய உண்மை - திராவிட கட்சிகள் அடிக்கடி இதை உபயோகித்திருக்கிறார்கள், யாரேனும் ஜமுக்காளத்தில் வடிகட்டுவார்களா என்று என் பகுத்தறிவுக்கு எட்டியவரை தெரியவில்லை -.
பெண்களுக்கு முன்னால் தானொரு வீரன், அறிவாளி, தானொரு செல்வந்தன் என்று நிருபீக்கும் அல்லது காட்டிக்கொள்ளும் சாதாரண சராசரி மனிதனின் மூளையே எனக்கும் இருந்தபடியால் நானும் பல பல புத்தகங்களை தோண்டி எடுத்துக்கொண்டிருந்தேன். எதேச்சையாக சிக்கியது அவனது குறிப்பேடுகள்.
முதல் பக்கத்தில் சூர்யா 12ம் வகுப்பு என்று இருந்ததை சூ வை அடித்து ஆ போட்டிருந்தது, அடைப்பு குறியில் 30ம் நூற்றாண்டு மூளை எனப்பொறிக்கப்படிருந்தது. அவனை கல்லூரி நாட்களில் காலத்தை மீறி கனவு காணும் அவனை எங்களது நண்பர்கள் வைத்த பட்டப்பெயர் 30நூற்றாண்டு முனுசாமி.
நான் ஆவலானேன், இப்பொழுது அவள் என் சிந்தனையில் அவுட் ஆப் போகஸ் ஆகி போனாள், முனுசாமியே என் கண் முன் நின்று தொலைத்தான். சுமார் 10 வருட முந்தைய நட்பு. இப்போ எங்கே, எப்படி, என்ன செய்கிறான் என்பதை அறிய முடியவில்லை. தேடும் அளவிற்கு அவனும் என் ஆத்ம சிநேகிதனும் அல்லன்.
அவனது குறிப்பேடுகளை தொடர்ந்து படிக்க ஆரம்பித்த போது, அவன் ஒரு பைத்தியக்காரன் என்றே எண்ண தோன்றியது. பல விசயங்கள் அவனது குறிப்பேட்டில் அதைத்தான் நிருபித்துக்கொண்டிருந்தது.
ஆனாலும் காத்திருந்த பின் அவனுக்கு என்னவாயிற்று, எதை வாங்க காத்திருந்தான், ஏதேனும் காவலர்களிடம் சிக்கினானா, அல்லது எழுதுவதை நிறுத்திவிட்டானா என தெரிந்த்து கொள்ள ஆவலாகினேன்.
ஒரு வாரம் அவனை பற்றி அறியும் ஆவலில் எனது பழைய நண்பர்களுக்கெல்லாம் தேடி தேடி தொடர்புகொண்டிருந்ந்தேன் என் அலைபேசியில். எதும் மெண்டல் காலேஜ்க்கு ஆள்பிடிக்கிறாயா என்ற கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் தேடியும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் அவன் மேல் இருந்த சுவாரஸ்யம் மெது மெதுவாக குறைந்து போனது.
அவனைப்பற்றிய நினைப்பை வேலை மற்றும் சொந்த சுமைகளின் அழுத்தத்தில் மறக்கலானேன்.
சுமார் ஒரு மாதம் அவனைப்பற்றிய முழுதும் மறந்து போயிருந்த சமையத்தில் அவ்னது நண்பன் (எனக்கும் நண்பன் எனலாம்) ஒருவனை கோவை டூ சென்னை ரயிலில் சந்திக்க நேர்ந்தது, அவனிடம் எனக்கு பேச வேறு எதும் கிடைக்காத காரணத்தினால், ஆர்யா பற்றி விசாரிக்கலானேன்.
அவனது தாய்/தந்தையர் மரணத்த பின் அவனை சந்திக்கவே இயலாமல் போனதாக வருத்தப்பட்டு கொண்டிருந்தான். அவன் திருமணம் செய்து கொள்ளவில்லையா என்ற கேள்விக்கு மெல்லிய புன்னகயை வெளிக்காட்டினான். ஒரு கதை இருக்கிறது என்பதை அது காட்டியது. கதை கேட்க விரும்பினேன். ஆர்யாவாக இருந்தால் எப்படி என்று கேட்டிருக்க மாட்டேன். இவனிடம் கேட்டுவிட்டேன்.
நல்ல வேளை சுருக்கமாக முடித்துவிட்டான். ஒரு சாலை விபத்தில் அவனது தாய் தந்தையர் இறந்து போயிருக்கிறார்கள், அவனை தொடர்பு கொள்ள முடியாததால் இறுதி சடங்கை அவனது தம்பியின் உதவியுடன் முடித்திருக்கிறார்கள். அவளது மனைவியும் வந்திருந்தாள் என்றான். எதோ கருத்து வேறுபாட்டில் பிரிந்திருக்கிறார்கள். இவன் அடுத்த நாள் காலையில்தான் வந்து சேர்ந்தான். யாரும் அவனிடம் பேசவில்லை, யாரிடமும் அவன் பேசவில்லை. மருந்துக்கும் அவன் விழியில் கசிவில்லை. நேராக அவனது அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டானாம். எனக்கென்னவோ அழுதிருப்பான் என்றே தோன்றியது.
பத்து நாட்கள் காரியம் முடியும் வரை அவனது தம்பியோடு ஒத்துழைத்தான். பத்தாம் நாள் காரியத்தில் சிவாவும் கூட இருந்திருக்கிறான். திடிரென்று அவனது மனைவி அவன் வீட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறாள். கன்னம் சிவந்திருந்தது. அறைந்திருக்கிறான். சிவாவிடம் அவர்கள்க்குள்ளே என்ன பிரச்சனை என்று கேட்கையிலே மேலே கை உயர்த்தி காட்டிவிட்டான்.
ஒரு சாரார் அவனது பழைய காதிலியுடன் அவன் நட்பு வைத்திருந்ததை அவன் மனைவி தட்டிக்கேட்டதால் என்றார்களாம், ஒரு சாரார் அவளது மனைவி அவனது பழைய காதலுடன் இருந்தனை அவன் பார்க்க நேர்ந்ததே என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு சிவா யாரையும் பார்க்கவில்லை என்றான், அவனது தம்பி சூர்யா பெங்களூரில் இருப்பதாக கூறினான். ஆனால் எங்கே என்று தெரியாது என்றுவிட்டான்.
ஆர்யாவிற்கு என்ன ஆகியிருக்கும்? அவனைப்பற்றி அறிந்த்து கொள்ளுமளவிற்கு அவன் ஒரு முக்கிய நபராக இல்லை. இருந்தும் ஆவலாகத்தான் இருந்தது. ஆர்யாவிற்கு என்னவாகி இருக்கும்?
(தொடரும்ம்ம்)
No comments:
Post a Comment