வங்காளதேசத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட அந்த நாட்டின் நிறுவனர் அப்துல் ரகிமானை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை நேற்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசத்தை பிரிப்பதற்கு காரணமாக இருந்தவர் முஜிபுர் ரகிமான். பாகிஸ்தான் ஆட்சிக்கு எதிராக சுதந்திர முழக்கம் செய்த ரகிமான் இந்தியாவின் உதவியுடன் அந்த நாட்டுக்கு 1971-ம் ஆண்டு விடுதலை பெற்று தந்தார். அதோடு, அதன் முதல் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.
அவரை ராணுவ அதிகாரிகள் சிலர் சேர்ந்து கொலை செய்தனர். முஜிபுர் ரகிமான் மனைவி, 10 வயது ரஸ்சல் உள்ளிட்ட 3 மகன்கள் என அவரது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் என 28பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவரது மகளும் இப்போதைய ஜனாதிபதியுமான ஷேக் ஹசீனா, அவரது தங்கை ஷேக் ரக்னா ஆகியோர் வெளிநாட்டில் இருந்ததால் உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் 1975-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நடந்தது.
இந்த கொலையை தொடர்ந்து நடந்த அரசியல் குழப்பங்கள் காரணமாக கொலையாளிகள் வழக்குகளில் இருந்து தப்பினர். அவர்களில் சிலர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
20 ஆண்டுகள் கழித்து,ஷேக் ஹசீனா வங்காளதேச பிரதமர் பதவிக்கு வந்த பிறகு தான் 1996-ம் ஆண்டு ரகிமான் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 1998-ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதன்படி 15 முன்னாள் ராணுவ அதிகாரிகள் குற்றவாளிகள் என்று கூறி அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க உத்தரவிட்டது. ஐகோர்ட்டில் நடந்த அப்பீலில் அவர்களில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர். 12 ராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதில் ராணுவ அதிகாரிகள் சயீத் பாரூக் ரகிமான், சுல்தான் ஷரியர் ரஷீத்கான், மொகிதீன் அகமது. ஏ.கே.எம்.மொகிதீன் பஸ்லுல் ஹூடா ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேர் வெளிநாடுகளில் தங்கி இருந்து கொண்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி வருகிறார்கள். அவர்களை வங்காளதேசத்துக்கு அழைத்து வருவதற்காக சர்வதேச போலீசின் உதவி கோரப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையின் போது ஒருவர் மரணம் அடைந்தார். இவர்களின் தூக்கு தண்டனை விசாரணை தொடங்கிய 13 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் 5 பேரும் வருகிற 31-ந் தேதிக்குள் தூக்கிலிடப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இவர்கள் 5 பேரும் டாக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் கருணை மனுவுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் மனுக்கள் ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அவர்கள் நேற்று அதிகாலை தூக்கிலிடப்பட்டனர்.
முன்னாள் லெப்டினன்ட் கர்னல் மொகிதீன் அகமதுவும், மேஜர் பஸ்லுல் ஹூடாவும் முதலில் தூக்கிலிடப்பட்டனர். சில நிமிட இடைவெளிக்கு பிறகு சையத் பாரூக் ரகிமான் 3-வதாக தூக்கிலிடப்பட்டார். கடைசியாக ஷரியர் ரஷீத்கான், ஏ.கே.எம்.மொகிதீன் கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் தூக்கில் போடும் வேலை 40 நிமிடங்களில் முடிந்தது.
இவர்கள் அனைவரும் அதிகாரிகள் முன்னிலையில் தான் தூக்கிலிடப்பட்டனர். இதற்காக டாக்கா மாவட்ட மாஜிஸ்திரேட்டு ஜில்லர் ரகிமான், டாக்டர் முஷ்பிகர் ரகிமான், சிறைகளுக்கான ஐ.ஜி.பிரிகேடியர் ஜெனரல் அஷ்ரபுல் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
தூக்கிலிடப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் 61 பேர் அவர்களை கடைசியாக பார்த்து பேசுவதற்காக அனுமதிக்கப்பட்டனர்.
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment