Sunday, January 31, 2010

[தமிழமுதம்] மகாத்மா காந்தியின் அஸ்தி 62 ஆண்டுக்குப் பின் கரைப்பு

மகாத்மா காந்தியின் அஸ்தி 62 ஆண்டுக்குப் பின் கரைப்பு

டர்பன் :  தென் ஆப்பிரிக்காவில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி அஸ்தியின் சிறு பகுதி, அவர் இறந்து 62 ஆண்டுகளுக்கு பின், நேற்று கரைக்கப்பட்டது.



மகாத்மா காந்தி, 1948ல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட பின், அவரது அஸ்தி, பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, கடல் மற்றும் நதிகளில் தூவப்பட்டது. மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்களுக்கும், உறவினர்கள் சிலரிடமும், அஸ்தி கலசங்கள் அளிக்கப்பட்டன. இவற்றில் சில, இன்னும் கரைக்கப்படாமல், காந்தியின் நினைவாக பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.மகாத்மா காந்தியின் குடும்ப நண்பரான, தென் ஆப்பிரிக்காவில் வசிப்பவரும், தொழில் அதிருபமான  தாகூர் பூலா (85) என்பவரிடமும் ஒரு அஸ்தி கலசம் கொடுக்கப்பட்டது. காந்தியின் நினைவாக இந்த கலசத்தை அவர் பாதுகாப்பாக வைத்திருந்தார்.



இந்நிலையில், மகாத்மா காந்தியின் 62வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டர்பன் நகரில் இருந்த மகாத்மா காந்தியின் அஸ்தி, இந்தியப் பெருங்கடலில் நேற்று கரைக்கப்பட்டது. காந்தியின் பேத்தி இலா காந்தி, அஸ்தியை கடலில் கரைத்தார்.



இதுகுறித்து இலா காந்தி கூறுகையில்,""காந்திக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே. இந்தியாவையும், தென் ஆப்பிரிக்காவையும் இணைக்கும் இந்தியப் பெருங்கடலில் மகாத்மாவின் அஸ்தி கரைக்கப்பட்டது மிகவும் பொருத்தமானது,'' என்றார்.



காந்தியின் அஸ்தி தனக்கு கிடைத்தது குறித்து, தாகூர் கூறியதாவது:காந்தியின் இறுதிச் சடங்குகளில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, அவரது குடும்ப நண்பர்கள் சிலருக்கு, அஸ்தி கலசம் கொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்ததாலும், காந்தியின் குடும்ப நண்பர் என்பதாலும், என்னிடமும் ஒரு அஸ்தி கலசம் கொடுக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்த கலசத்தை என்னிடம் கொடுத்தார். டர்பன் நகரில் உள்ள சர்வோதயா அலுவலகத்தில் அதை, காந்தியின் நினைவாக பாதுகாத்து வைத்திருந்தேன்.இவ்வாறு தாகூர் கூறினார்.



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment