Monday, December 21, 2009

[தமிழமுதம்] Re: தினகரன்: ''ராமேஸ்வரம் கொட்டகை தியேட்டரில் படம் பார்க்க யாழ்ப்பாணத்தில் இருந்தும் வருவார்கள்''

சிறீதரன்,

நல்ல கட்டுரை.

'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்றார் மகாகவி பாரதியார்.

ஒருநாள் ஈழத்துக்காரர்கள் ராமேசுவரத்தில் சினிமா, கலை நிகழ்ச்சிகள்
பார்க்கவும்,
தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகளில், கார்களில் மக்கள்
இலங்கைக்கு கடலின் மீது எழுப்பப்பட்ட பாலத்தின் வழியாகப்
போய் சுற்றுலா, வணிகம் செய்யும் நாள் வரட்டும்.
சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையில் கடல்வழியாக செல்ல வசதிகள்
உள்ளதுதானே.

தமிழ்நாட்டு, இலங்கை (தமிழ், சிங்களம்) அரசியல் தலைவர்கள்
முயன்றால் கடல்பாலம் வரும். தொழில்நுட்பம் இருக்கிறது,
பாலம் கட்ட தமிழ்நாடு, இலங்கையில் பணமும் நிறைய உள்ளது.
அரசியல் முயற்சிகளால் இது சாத்தியம் ஆகலாம்.

அன்புடன்,
நா. கணேசன்

On Dec 20, 12:47 am, "Sri Sritharan" <kstha...@bigpond.com> wrote:
> ''ராமேஸ்வரம் கொட்டகை தியேட்டரில் படம் பார்க்க யாழ்ப்பாணத்தில் இருந்தும் வருவார்கள்''
>
> இன்றைய இளைய தலைமுறையினருக்கு கே.வி.எஸ். மோகன் பற்றி அதிகம் தெரியாது. இவர் 1959ம் ஆண்டு கதம்பம் என்ற இதழை ஆரம்பித்து 1983ம் ஆண்டுவரை அச் சஞ்சிகையை நடத்தி வந்தவர்.
>
> இளமை இனிமை துடிப்பு என்றெல்லாம் அழைக்கிறார்களே அந்தத் துடிப்பையும் இளமையையும் உண்மையாகவே ஒவ்வொரு இதழிலும் கொண்டுவந்து ஜனரஞ்ஜகமாகவும் பரபரப்பாகவும் இலங்கையில் நீண்ட காலத்துக்கு சஞ்சிகை நடத்தியவர் இவர். இவ்வாரம்
>
>       'கதம்பம்' ஆசிரியர்
>
>       கே.வி.எஸ் மோகன்
>
> இலங்கைத் தமிழ்வாணன் போல செயல்பட்டார். தமிழகச் சினிமா மற்றும் அரசியல் உலகுகளில் வானம்பாடியாக பறந்து திரிந்தவர். நிறைய எழுதியவர். இன்று எழுத்து, பதிப்புத் துறைகளில் இருந்து முற்றிலும் விலகி, விளம்பர முகவராகத் தானும் தன் வேலையுமாக இருக்கிறார். இப்போது உங்களுடன் பேச இங்கே வந்திருக்கிறார்.
>
> "கும்பகோணத்தில் நான் இரண்டாவது படித்துக் கொண்டிருந்த காலம். எனக்கு அப்போது ஒரு ஏழு வயதிருக்கும். மகாத்மா காந்தி ஊருக்கு வருகிறார் என்ற செய்தியால் கும்பகோணமே பரபரப்பில் இருந்தது. மகாத்மா காந்தியை மக்கள் நேரில்காண வேண்டும் என்பதால் அரசலாறில் ஆறு மணல் தரையானது. கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் நானும் முண்டியடித்தும் கொண்டு முன்னால் சென்றேன்.
>
> அந்த அரசலாறு ரயில் பாலத்தில் நின்ற ரயிலில் இருந்து செம்மண்ணால் செய்த பொம்மை மாதிரி மகாத்மா காந்தி இறங்கி வந்தார். அவருக்குப் பின்னால் கறுப்புக் கண்ணாடி அணிந்த ராஜாஜி இறங்கினார். உலகத்தின் உன்னதமான அந்த இரு தலைவர்களையும் கண்டுவிட்ட சந்தோசத்தை வார்த்தையால் விபரிக்க முடியாது. என் மனதை விட்டு அகலா நினைவுகளில் இதுவும் ஒன்று! என்று சொல்லும் கதம்பம் ஆசிரியரின் அந்தக்கால நினைவுகளின் பயணம் மேலும் தொடர்கிறது.  
>       ஜெமினி வீட்டில், சாவித்திரி கண்ணதாசனுக்கு பரிமாற அருகே கே.வி.எஸ்
>
> "எப்போதும் புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்பது என் கொள்கை. அதனால்தான் அப்பா பெயரை மட்டும் முதலெழுத்தாக போட்டுக்கொள்ளும் இந்த காலத்தில் எனது ஊர் பெயரையும், என் தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் இணைத்து எனக்கு நானே ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டேன். (கே. வி. எஸ். மோகன்)
>
> கும்பகோணம் வேதாந்தம் சீனிவாஸ், மோகன் என்பதே அதன் அர்த்தம் என்று புன்னகைக்கும் மோகனின் பூர்வீகம் காவிரி கரையில் உள்ள கும்பகோணம்தானாம். ஆசாரமான அக்ரஹாரத்து மனிதர்தான் மோகன். தனது ஆரம்ப அரிவரி பற்றி இப்படி விபரிக்கிறார்.
>
> "கும்பகோணத்தில் எங்க தாத்தா ராஜகோபால ஐயங்கார் வீட்டுலதான் நான் தங்கியிருந்து படித்தேன். சகோதரிகள் ஒருவரும் என்னுடன் இரு ந்தார். காவிரிக்கும் அரசலாறுக்கும் இடையில் உள்ள ஒரு தீவு போன்ற பகுதிதான் கும்பகோணம். அங்கே பிராமணர்கள் தான் பெரும்பான்மையாக வசித்தார்கள்.
>
> சாரங்கபாணி கோவிலின் வாசலில் உள்ள முதல் வீடுதான் எங்கள் வீடு. எனது பக்கத்து வீட்டுக்காரர்தான் நடிகர் கிரேஸிமோகன். எனது பெயரை பார்த்து விட்டுத்தான் கிரேஸ்யின் பெற்றோர் அவருக்கு மோகன் என்று பெயர் வைத்ததாக என் தாத்தா என்னிடம் சொல்லியிருக்கிறார். அப்புறம் எனது பக்கத்துத் தெருவில் குடியிருந்தவர்தான். கணிதமேதை ராமானுஜம்.  
>       மூதறிஞர் இராஜாஜியுடன்.
>
> சின்ன வயசுல அவரு வீட்டு முற்றத்தில்தான் விளையாடிக்கிட்டிருப்போம். அந்தக் கணித மேதையிடம் நான் குட்டி குட்டி கணக்குகளை கேட்டிருக்கிறேன். அவரும் சிரித்துக் கொண்டே எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். நான் முதல் முதலாக அரிவரி படிக்கப் போனது இன்றைக்கும் என் ஞாபகத்தில் இருக்கு.
>
> என்னை மணமகன் மாதிரி அலங்கரித்து கழுத்தில் பெரிய மாலைபோட்டு தாளதப்பட்டை முழங்க காரில் அமர வைத்து பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். அந்த பாடசாலையின் பெயர் கும்பகோணம் ராமா ஆரம்பப் பாடசாலை. அங்கே ராமாமிர்தம் என்ற தலைமையாசிரியர் எனக்கு அரிவரி எழுதக் கற்றுக்கொடுத்தார்.
>
> அங்கே முதலாம் ஆண்டுவரை கற்றுவிட்டு பிறகு கும்பகோணம் உயர் நிலை பள்ளியில் சேர்ந்தேன். அங்கே எனக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களில் முரசொலிமாறனின் மச்சான்மார் சம்பத் மற்றும் சந்தானமும் அடங்குவர். அதே பள்ளியில் என் சகோதரியோடு படித்தவர்தான் மல்லிகா.
>
> அவர்தான் முரசொலிமாறனின் மனைவி. சம்பத், சந்தானம் இருவரில் ஒருவர் கலக்டர் பதவியேற்று சென்றுவிட்டதாக பின்னாளில் தெரிந்து கொண்டேன். இப்போது அவர்களுடனான தொடர்பு எதுவும் இல்லை. முப்பது வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் கிரேஸி மோகனை அவரது வீட்டில் வைத்து சந்தித்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அவரின் அப்பா என்னை அடையாளம் கண்டு கொண்டார். பிறகு வாழ்க்கை திசைமாற, பத்து வயதிலேயே கொழும்புக்கு வந்துவிட்டேன்.
>
> ஐந்தாம் வகுப்பிலிருந்து கொட்டாஞ்சேனை சென்பெனடிக்ஸ் பாடசாலையில் படிக்க ஆரம்பித்தேன். அங்கேதான் எனக்கு தெ. ஈஸ்வரன், ரட்னராஜா ஆகியோர் நண்பரானார்கள். எனக்கு வீட்டில் பத்து ரூபா கிடைத்தால் போதும்.
>
> நானும், ஈஸ்வரனும் பம்பலப்பிட்டி கிரீன்லன்ட்ஸ் ஹோட்டலில் சாப்பிடப் போவோம்" என்று இனிக்கும் அந்தக் கால அனுபவங்களைச் சுவைப்படக் கூறும் கே. வி. எஸ். சிடம் காதல் பற்றிக் கேட்டோம். பதறிவிட்டார். கே. வி. எஸ். 'அதெல்லாம் கிடையாதுங்க. என்னை நம்புங்க" என்கிறார். தமிழ்த் திரையுலக பிரபலங்களுடன் நெருக்கமாகப் பழகிய இந்த வசீகர இளைஞன் காதலிக்கவும் இல்லை; காதலிக்கப்படவுமில்லை என்றால் நம்பத்தான் முடிகிறதா? நம்புவோமாக!
>
> "வீட்டில் பார்த்த மணப்பெண்ணைத்தான் மணந்தேன். எனது மனைவியின் வீட்டார் எல்லோருமே பத்திரிகையாளர்கள்தான். சென்னை தியாகராஜநகர் ஸ்ரீநிவாசா திருமண மண்டபத்தில் தான் எமது திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் அன்றைய திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். எழுத்தாளர்களில் தமிழ்வாணன், கல்கி ராஜேந்திரன், குமுதம், பார்த்த சாரதி உள்ளிட்ட பலரும் திருமணத்துக்கு வந்திருந்தார்கள்.
>
> திருமணம் முடிந்ததும் தேனிலவுக்கு பெங்களூருக்குச் சென்றோம். எனது மனைவிக்கு கர்நாடக இசையில் அதிக ஆர்வம். அதனால் கர்நாடக கச்சேரிகளையே அதிகம் பர்த்தோம்! எனது திருமணம் நடைபெற்ற போது எமது குடும்ப நண்பரான எம். எஸ். சுப்புலட்சுமி ஊரில் இல்லை. ஆகையினால் எமது திருமணத்திற்கு பிறகு ஒருநாள் எம்மை அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.
>
> விருந்து முடிந்ததும் எம்மை அவர் வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் திருமணப் பரிசாக ஒரு பாட்டுப் பாடினார். அந்தப் பாடலைப் பதிவு செய்து நீண்டகாலமாக நான் வைத்திருந்தேன்.! என்று தமது திருமண ஞாபகங்களை இரைமீட்டிய கே. வி. எஸ்., தாம் முதல் முதலாகப் பார்த்த சினிமா பற்றியும் கூறினார்.
>
> "கும்பகோணம் நகரில் இருந்த டயமன்ட் படமாளிகையில் அபூர்வ சகோதரர்கள் படம்தான் நான் முதன்முதலாகப் பார்த்த சினிமா. அதில எம். கே. ராதா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றால் கொட்டகை தியேட்டரில் தரையில் அமர்ந்து படம் பார்த்தி ருக்கேன். நிறைய பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருப்பார்கள். படம் பார்க்கிறதுக்காகவே யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலமாக ரமேஸ்வரம் வருவார்கள்" என்று அந்த காலத்தை நினைத்து பெருமூச்சு விடுகிறார்.
>
> ம்.... அது ஒரு காலம் என்று சொல்லக் கூடிய மாதிரி ஒரு சம்பவம் சொல்லுங்களேன் என்றோம்.
>
> "அப்போ நான் கார் வாங்கின புதிது. தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்றழைக்கப்பட்ட ஜெய்சங்கர் கொழும்பு வந்திருந்தார். அவரை வானொலி அறிவிப்பாளர் மயில்வாகனம் அழைத்து வந்து அவரின் வீட்டில் தங்க வைத்திருந்தார். நான் அவரை சந்தித்த போது கொழும்பை சுற்றிப்பார்க்க விரும்புவதாகக் கூறினார். ஜெய்சங்கரை காரில் ஏற்றிக்கொண்டு கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதி வழியாக வரும் போது அந்தோனியார் கோவிலுக்கருகில் எமது கார் பிரேக்டவுன் ஆகிவிட்டது.
>
> அதன் பிறகு அங்கிருந்து ஒரு வாடகைக்கார் பிடித்து கோட்டைக்கு வந்தோம். அங்கே கொஞ்சம் சுற்றிப் பார்த்துவிட்டு கார்கில்ஸ் கட்டடத்துக்கருகில் வந்தோம். அங்கே தண்ணீர் குழாய் ஒன்று இருந்தது. அது பிரிட்டிஷ் காலத்தில் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க அமைக்கப்பட்டிருந்த குழாய். அதனோடு இருந்த இரும்பு தடுப்பு வேலியில் நானும் ஜெய்சங்கரும் அமர்ந்து கொண்டு மயில்வாகனம் வீட்டுக்குச் செல்ல டெக்ஸிக்காக நீண்ட நேரம் காத்திருந்தோம். அந்த காலம் திரும்பவும் கிடைக்குமா.... என்று சுகமான அனுபவங்களை மீட்டி சுகம்காணும் மோகன், இளையராஜா கொழும்பு வந்த ஒரு சம்பவத்தையும் நினைவுபடுத்தினார்.
>
> "நான் ஜெமினி ரசிகராக இருந்த காலத்தில் ஜெமினி ரசிகர் மன்றம் ஆரம்பித்தேன். அதில் செயலாளராக புகைப்படப் பிடிப்பாளர் சலாஹ¤தீன் இருந்தார். அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. அவர் என்னை குரு என்றுதான் அழைப்பார். கதம்பம் பத்திரிகையில் புகைப்படக்கதை ஒன்றை ஆரம்பித்தேன். ஸ்டார் எழுத்தாளர் துப்பறிகிறார் என்ற பெயரை அந்தக்கதைக்கு தமிழ்வாணன் சூட்டினார். கதாநாயகனாக நான் நடித்தேன். அதற்கான படங்களை சலாஹ¤தீன் எடுத்தார்.
>
> ரீகல் தியேட்டருக்கு அருகில் ஒரு பாலம் இருக்கும். அதில் ஏறி குதித்து லேக்ஹவுஸ் கீழே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஓடுவது போன்ற காட்சிகளை அங்கே படம் பிடித்தோம். இன்றைக்கு நினைத்தாலும் ரொம்பவும் இனிமையாகத்தான் இருக்கு. என்னுடைய கதம்பம் ஆரம்ப கால சஞ்சிகையில் என்னோட வளர்ச்சி படிப்படியாக வளர்ந்ததை அவதானிக்கலாம். மாணவப் பருவம், இளமைப் பருவம் என ஒரு மாறுதல் இருக்கும். கல்கண்டு அட்டைப்படத்தில் அதன் ஆசிரியர் தமிழ்வாணனின் படம் வந்தது போல என்னோட படத்தையும் அட்டையில் பிரசுரித்து எனக்கென்று ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றேன். நான் எங்கு சென்றாலும் என்னை மக்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள்.
>
> வீரகேசரி ஆசிரியராக விழங்கிய கே. வி. பி வாஸ் தான் என் தந்தை. எனது அம்மாவும் ஒரு எழுத்தாளர்தான். அப்பாதான் எனக்கு கதாநாயகன். எனவேதான் நானும் பத்திரிகையாளராக முடிந்தது. அம்மா எனக்காக கதம்பம் பத்திரிகையை தொடங்கித்தந்தார். எனது ஆசிரியர் தலையங்கத்தில் கீழே ஒரு லோகோவை போடுவேன்.
>
> அதில் அன்னம் மூட்டிய தெய்வமனிக்கை ஆனைக்காட்டில் ஆணையிட்டால் அணலை விழுங்கும். என்ற வசனம் இருக்கும். தாய் சொன்னால் நான் நெருப்பை விழுங்கவும் தயார் என்பதை அந்த வசனம் விளக்குவதாக அமைந்திருந்தது. கதம்பம் சஞ்சிகையை தொடங்கும் போது இங்கே இருந்த இலக்கியவாதிகளும், முற்போக்குவாதிகளும் என்னை எதிர்த்தார்கள். இந்திய இலக்கியத்தை இங்கே கொண்டு வருகிறோம் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இப்படி பல தடைகளைத் தாண்டிப் புறப்பட்டதுதான் கதம்பம்.
>
> எனது பத்திரிகையை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என்பது எனக்குள் உருவான ஒரு ஆசை. அதற்கு முயற்சி செய்தேன். அப்போது தமிழகத்தில் காமராஜ் முதலமைச்சராக இருந்தார். அவரை சந்தித்து பேட்டியெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது கதம்பம் குறித்த எனது ஆசையைச் சொன்னேன். அவரும் அதற்கு சம்மதித்து இந்தியாவில் கதம்பம் விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வாங்கிக்கொடுத்தார். கதம்பம் பத்திரிகைக்கான ஏஜெண்டாக தமிழ்வாணன் இருந்தார்.
>
> அதன் பிறகு ஆனந்த விகடன் குமுதம் விற்கும் நாடுகளில் எல்லாம் கதம்பம் விற்பனை செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து முதன்முதலாக தமிழகத்திற்கு சட்டபூர்வமாக ஒரு சஞ்சிகை ஏற்றுமதி செய்யப்பட்டது என்றால் அது கதம்பம்தான். அது ஒரு காலம்... திரும்பவும் அதை மீட்டிப்பார்க்கும் போது ஒரு சுகம் தெரிகிறது" என்று புன்னகைக்கிறார் கே. வி. எஸ்.
>
> வாழ்க்கையில் நீங்கள் தவறவிட்டது?
>
> "படிப்புதான். ஆனால் அதை ஈடுசெய்யும் விதமாக என் பிள்ளைகள் படித்துவிட்டார்கள். மறக்கமுடியாத நபர்கள் என்றால் என் நண்பர்கள்தான். தமிழ்வாணன், கங்கை பத்திரிகை ஆசிரியர் பகீரதன் உள்ளிட்டோரைக் கூறலாம் என்றவரிடம் வாழ்க்கையைப் பற்றி தங்களின் புரிதல் என்ன என்று கேட்டோம்.
>
> இந்துமத தத்துவங்களில் நான் அதிகம் நம்பிக்கை உடையவன். நாம் செய்த பாவ புண்ணியம் தான் நம்மை தொடர்ந்து வரும் என்பார்கள். வயசு கோளாறில் நாம் செய்த தவறுகளை வாழும் காலத்திலேயே நாம் திருத்திக் கொண்டால் அது நமக்கு நன்மை பயக்கும். அதற்கு அமைய நான் என் மனசாட்சிக்கு சரியெனப் பட்டத்தை சிறப்பாக செய்து சுகமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். உலகத்தில் வாழ்க்கை இனிமையானது. அதை இனிமை என்று நினைத்து வாழ்ந்தால் வாழ்க்கை எல்லோருக்கும் இனிமையே" என்று கூறி முடித்தார் கே. வி. எஸ். கதம்பம் மோகன்.
>
> நன்றி: தினகரன் வாரமஞ்சரி, டிசம்பர் 20, 2009
>
>  f0912204-1.jpg
> 5KViewDownload
>
>  f0912204-7.jpg
> 18KViewDownload
>
>  f0912204-6.jpg
> 16KViewDownload

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment