Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] படித்ததில் பிடித்தது

நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். கோபம் என்னும் தீயை அணைத்து விட வேண்டும். இல்லாதவர்களுக்கு செய்யும் உதவிகளைத் தடுப்பது கூடாது. தன்னிடம் சிறப்பாக உள்ளவற்றை பிறருக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் தானே வலியச் சென்று சொல்லக்கூடாது.

நல்ல செயல்களைச் செய்வதில் உள்ள ஆர்வத்தை தளரவிடக் கூடாது. ஒருவரிடம் தனக்கு உதவவேண்டும் என்று யாசிப்பது கூடாது. உலகியல் நடைமுறைக்கு ஏற்ப உதவி செய்யும் உயர்ந்த குணத்தோடு வாழ வேண்டும்.

கற்க வேண்டியவைகளைத் தேடி நாள்தோறும் கற்றுக் கொண்டேயிருத்தல் வேண்டும். பிறருடைய வாழ்க்கை முன்னேற்றத்தைப் பற்றிப் பொறாமையால் தவறாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

விளைபொருள்களை அளக்கும்போது குறைத்து அளத்தல் கூடாது. கண்ணால் கண்டதை மாற்றி உண்மைக்குப் புறம்பாக வேறு ஒன்றாகச் சொல்லக்கூடாது.

கேட்பவர்களுக்கு இனிமை ஏற்படும் வகையில் நயமாகப் பேச வேண்டும். பெற்றோர்களான தாயும் தந்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

பயனை எதிர்பாராமல் பிறர் செய்த உதவியை எந்த நிலையிலும் எந்தக் காலத்திலும் மறப்பது கூடாது. மற்றவர்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்தி அதன் பயனை உண்டுவாழ்தல் கூடாது.

-அவ்வையார்

 

செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்னபடியே நடந்து கொள்ளுங்கள். எல்லா மனிதர் களையும் நேசித்து சேவை செய்யுங்கள். ஆர்வத்தோடு சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

எதையும் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தால் தான் பயனுடையதாகும். வெறும் புத்தக அறிவு மட்டும் போதாது. அது மேலோட்டமானதே. ஆழ்ந்த பயன் தரக்கூடிய அனுபவ அறிவு மனித வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இயற்கை அன்னைக்கு மதிப்பு கொடுங்கள். சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். இல்லாவிட்டால் அபாயம் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் காரணமாகி விடுவோம்.'

தனித்து வாழாதீர்கள். ஒதுங்கிப் பழகாதீர்கள். மனம் விட்டுப்பழகக் கற்றுக் கொள்ளுங்கள். ஒற்றுமை உணர்வு உங்களைச் சுற்றி மலர விடுங்கள். 

- சாய் பாபா

 

நம்பிக்கையற்ற மனம் எப்போதும் சந்தேகிக்கவே செய்யும். காரணம் அது புரிந்து கொள்ளவில்லை என்பதுதான். நாம் அன்பு செய்யலாம், இரக்கம் கொள்ள லாம், எந்த உணர்வையும் வெளிப்படுத்த லாம். ஆனால், இறைவனை தவிர வேறெந்த சக்திக்கும் அடிமையாகி விடக் கூடாது.

வீரத்தையும் அன்பையும் விட்டு விடாதீர்கள். உங்கள் ஆன்மாவை அழிவிலிருந்து காக்கக் கூடியது இந்த இரண்டு நற்குணங்களும் தான். இவற்றால் வாழ்வை சந்தோஷமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

சிலருக்கு அற்பங்கள் அற்புதமாகி விடுகின்றன. சிலருக்கோ அற்புதங்கள் அற்பமாக விடுகின்றன. அதுதான் புனிதர்களுக்கும், தலை சிறந்த புனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

நாம் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அப்போது வாழ்வும் முற்றுப்பெற்றுவிடும். மரணத்தை வீழ்த்த நம்மால் முடியாது. ஆனால், வாழ்க்கையை உன்னதமாக்க முயன்றால் அது கைகூடுகிற காரியம்.

- அரவிந்தர்

 

பிறர் உதவியை நம்பி இராமல் உங்கள் சொந்த பலத்தையே நம்பியிருக்க வேண்டும். ஆத்மபலம் இல்லாத வேறு எந்த பலமுமே அற்பமானது. பயனற்றது. எண்ணிக்கையில் உயர்ந்திருந்தாலோ, ஆயுதபலத்தில் உயர்ந்திருந்தாலோ அதெல்லாம் உண்மையான பலமாகிவிடாது.

 

 

கருணையே உருவானவர், அன்பு மயமானவர், நம் பிழைகளைப் பொறுப்பவர் என்றெல்லாம் கடவுளுக்கு இலக்கணம் சொல்லிவிட்டு அவர் பெயரால் வாயில்லாப் பிராணிகளைக் கொல்லுவது மன்னிக்க முடியாத பாவமாகும்.

வீரமுள்ள மனிதன் தனக்கு எப்போது மரணம் வந்தாலும் வரவேற்பான். அதை நண்பனைப் போல் வரவேற்பான். அதற்காக யாரும் மரணத்தை அறைகூவி அழைக்க வேண்டியதில்லை.

மனதைக் கட்டுப்படுத்தாமல் வெறும் உடலை மட்டும் கட்டுப்படுத்த முயல்வது முடியாத காரியமாகும். கட்டுப்பாடு மனதிலிருந்து உண்டானால் மட்டுமே பயனுடையதாக இருக்கும்.

-காந்திஜி

·                      ஒருவன் எத்தனை விசேஷ அனுகூலங்கள் படைத்திருந்த போதிலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு குறைந்தனவாகவே இருக்கும்படி இயற்கை அமைப்பு அமைத்திருக்கிறது.

·                      மனிதர்கள் எலி பொறிக்குள் சிக்கிக் கொள்வதுபோல, ஒரு சில வளையங்களுக்குள் உட்பட்டுத் தவிக்கிறார்கள். இதனால், மனிதவாழ்க்கை நரகம் போல் தீராத துன்பத்தை தருவதாக மாறிவிட்டது.

·                      மனிதனுக்குள் பரமாத்மாவின் சக்தி நிகழ்கின்றது. சாமான்ய நிலையில் அது மனிதனுடைய அறிவில் தோன்றாமல் மறைந்து கிடக்கிறது. நமக்குள் சிறுமை உணர்ச்சி இருக்கும் வரை இச்சக்தி நம்மில் வெளிப்பட்டுத் தோன்றுவதில்லை.

·                      படித்தவன் படிக்காதவனை வெறுமனே குருடனாகக் கருதி நடத்துகிறான். பணமுடையவனோ பணமில்லாதவனைப் பிணமாகக் கருதி அவமானப்படுத்துகிறான்.

·                      அஞ்சாத மனோதைரியம் கொண்டிருப்பதைவிடச் சிறந்த புண்ணியம் வேறொன்று இம்மண்ணிலுமில்லை. மேலுலகத்திலுமில்லை. அம்மனிதன் எல்லா இன்பங்களையும் பெறத் தகுதியுடையவனாகிறான்.

-பாரதியார்



--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment