Tuesday, December 22, 2009

[தமிழமுதம்] Re: ஆங் கில வழி கல் விக்கு ஆத ர வாக செயல் ப டும் தமி ழக அரசு : ராம தாஸ் குற் றச் சாட்டு

தமிழக பள்ளிகள் அனைத்திலும் தமிழே பயிற்றுமொழி என்று அறிவிக்க வேண்டும்:

தமிழக பள்ளிகள் அனைத்திலும் தமிழே பயிற்று மொழி என்று அரசு அறிவிக்க
வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை
நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை அரசு
மேற்கொண்டு வருகிறது. ஆனால், தனியார் மயத்தை அனுமதிக்கும் ஆங்கில
வழியிலான கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசின்
சமச்சீர் கல்விக்கான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

பெரும்பான்மையான மாணவர்கள் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்
வழியில் கல்வி கற்று வருகிறார்கள். இதில் நான்கில் ஒரு பகுதிக்கும்
குறைவானவர்களே ஆங்கில வழி பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர்.
ஏற்கனவே நன்கு படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் தான் ஆங்கில வழியிலான
கட்டணப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கிறார்கள்.

சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துகிறோம் என்று அறிவித்துவிட்டு, கட்டணப்
பள்ளிக்கூடங்களும், ஆங்கில பயிற்றுமொழியும் நடைமுறையில் தொடர்ந்து
நீடிக்கும் என்று அறிவித்திருப்பது சமூகநீதிக்கு எதிரானது மட்டுமன்றி,
அரசியல் சட்டத்திற்கும் எதிரானதாகும். 6 வயது முதல் 14 வயது வரையிலான
குழந்தைகள் எல்லோருக்கும் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும். அதுவும்
இலவசமாக அளிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், ஆங்கில வழி
கட்டணப்பள்ளிகள் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் அனைவருக்கும் இலவசக்
கல்வி என்பது எப்படி சாத்தியமாகும்?

சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் மொழிக் கல்வியை கொண்டு வர வேண்டும்
என்ற கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர், தாய்மொழியில்
மட்டும் எந்த அளவுக்கு பயன்பெற முடியும் என்பதையும், ஆங்கிலத்தின்
உதவியால் எந்த அளவுக்கு பயன்பெற முடியும் என்பதையும் சிந்தித்து பார்த்து
முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் ஆங்கில வழியில் கல்வி
கற்றால் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்றும், போட்டி தேர்வுகளில்
வெற்றிபெற முடியும் என்றும் கட்டணப் பள்ளிக்கூடங்களை நடத்துவோரின் பொய்
பிரசாரத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் எல்லா பள்ளிகளிலும் மும்மொழி திட்டத்தை அகற்றிவிட்டு
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கே இடம் என்பதுதான் அண்ணாவின்
இருமொழிக் கொள்கை. இதில் எங்கேயும் ஆங்கில பயிற்றுமொழி என்ற குறிப்பே
இல்லை. ஆங்கில பயிற்றுமொழி என்பது இடையில் வந்தது. அதற்கு முன்பெல்லாம்
தமிழ் பயிற்றுமொழி பள்ளிகளிலேயே பெரும் பாலானவர்கள் படித்தனர்.

அப்படி படித்தவர்களெல்லாம் அறிஞர்களாகவும், மேதைகளாகவும், அரசு
உயரதிகாரிகளாகவும் விளங்கியிருக்கிறார்கள். மருத்துவர்களாக,
விஞ்ஞானிகளாக, நிர்வாகிகளாக, வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி பிறந்த
மண்ணுக்கு பெருமை தேடித்தந்திருக்கிறார்கள். ஆங்கில வழி கல்வியை
கற்றால்தான் பயன்பெற முடியும் என்பதெல்லாம் வெறும் மாயை. இந்த மாய
வலையில் தமிழக அரசு சிக்கிவிடக் கூடாது.

இன்னும் சில மாதங்களில் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க இருக்கிறது.
ஒருபுறம் செம்மொழி மாநாட்டினை நடத்திவிட்டு, இன்னொருபுறத்தில்
தமிழ்மொழியில் மட்டும் எந்த அளவுக்கு நன்மையென பார்க்க வேண்டும் என
அறிவிப்பது முரண்பாடானதாகும். எனவே, செம்மொழி மாநாடு நடக்க இருக்கும்
இந்தத் தருணத்தில் தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் தமிழே பயிற்றுமொழி என்ற
அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
தமிழ்மொழி வழியில் கற்பதுதான் சிறந்தது என்பதை மக்களும், பெற்றோரும் உணர
செய்யும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதன் மூலம் நமது கல்வி
முறையில் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வை போக்கி சமூக நீதியை நிலைநிறுத்த முன்வர
வேண்டும்.


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment