2009/12/20 செல்வன் <holyape@gmail.com>
-- சமஸ்கிருத ராஜன் தமிழில் அராஜன் என மருவி, அரசன் என ஆனதாக George William Brown குறிப்பிடுகிறார்.ராஜன் இராஜன் அராஜன் என மறுவியது.இம்மாதிரி சொற்களை தமிழ் ஜகரத்தை சகரமாக மாற்றி ஏற்றுகொண்டது என்கிறார்
"Sanskrit rajan, " king," appears as irajan or arajan in Tamil (Brown, 1930, Pg. 290)
Brown,George W. (1930), "The Possibility of a Connection between Mitanni and the Dravidian Languages,"Journal of the American Oriental Society, Vol. 50, (1930), pp. 273-305
இது 80 ஆண்டுக்கு முற்பட்ட கருத்து. அப்போதெல்லாம், ஒரு தென்சொல்லின் வடிவங்கள் வடசொல்லில் இருந்தால், வடசொல்தான் மூத்தது என்ற கருத்து நிலவியது. சென்னைப் பல்கலை தமிழ்ப் பேரகராதியில் பல சொற்களுக்கு இப்படித்தான் வேர்ச்சொல் காட்டியிருப்பார்கள்.
எமெனோ, பர்ரோவின் திராவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி தோன்றுவதற்கு முன்னர், சமஸ்கிருதம் வேறு மொழிகளிலிருந்து சொற்களை இரவல் வாங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தையே யாரும் ஏற்கவில்லை. இன்றும்கூட சமஸ்கிருதம் தேவமொழி என்று நம்புபவர்கள் உண்டு.
இராஜன் அல்லது அராஜன் எப்படி அரசன், அரையன், இராயன், என்று எல்லா தென்மொழிகளிலும் ஒரே போல் திரிந்திருக்கும் என்பதைக் காட்டவில்லை.
பண்டைக்காலத்தில் தென்மொழிகள் சமஸ்கிருதத்தை விட பிராகிருதத்தின் தொடர்பையே கூடுதலாகப் பெற்றிருந்தன. பௌத்தர்களும், சமணர்களும், ஆசீவகர்களும், ஏனைய "புறமதத்தார்களின்" கருத்துகளே தென்னகத்துக்கு முதலில் வந்திருக்கின்றன.
ராஜாவிலிருந்து அரசன் வந்திருந்தால், அரசியைக் குறிப்பிடும் ரஜனி/ராஜனி என்ற சொற்களோ, ராணி என்ற சொல்லோ ஏன் தென்மொழிகள் எவற்றிலும், அரையன் போல் திரியவில்லை என்பது சிந்திக்கத்தக்கது.
இதே போல் ராஜ்யம், ராஷ்ட்ரம் என்ற சொற்களும் ஏன் அதே போல் தென்மொழிகளில் திரியவில்லை என்பதும் கேள்விக்குரியது.
அரண், அரண்மனை என்ற சொற்களும் வடமொழியில் இருந்து வந்தவை என்பதும் கேள்விக்குரியது. ஆரிய மொழிகள் கோட்டையும், அரணும் கட்டி வாழ்ந்த மக்களின் மொழிகளல்ல. இந்திரனும், ஏனைய ரிக் வேதக் கடவுளரையும் கோட்டைகள் அரண்மனைகள்மேல் இடி வீழ்த்தி அழிக்க வேண்டியிருக்கிறார்கள் ரிக் வேத ரிஷிகள்.
கோ, கோன் என்ற சொற்கள் தலைவனைக் குறிப்பிடும் தமிழ்ச் சொற்கள். Cohn, kahn என்ற செமித்திய சொற்களும் தலைவனை, அரசனைக் குறிப்பிடும் சொற்கள். இருப்பினும், இவை இரண்டுக்கும் தொடர்பு ஏதும் இல்லாமல் தற்செயலாகத் தோன்றிய சொற்கள் என்பார் மொழியியலார்.
ராஜனும் அரசனும் ஏன் அதே போல் தற்செயலாகத் தோன்றிய சொற்களாக இருக்ககூடாது?
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சான் ரமோன், கலிஃபோர்னியா
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment