--இஸ்லாம் இவ்வுலகை நேர்வழியில் நடத்த நம்மைப் படைத்த இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட சீரான வாழ்க்கைத் திட்டமாகும். அது மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவனுடைய ஒவ்வொரு மணித்துளியிலும் அவன் எவ்விதம் செயல் படவேண்டும் என்பதையும் எதைச் செய்தால் இவ்வுலகிலும் மரணத்திற்குப் பின்பும் வெற்றி பெற முடியும் என்ப்தையும் தெளிவாகக் கற்றுத்தருகிறது. மனிதனின் பிறப்பு, குழந்தைப் பருவம், திருமணம், பழக்கவழக்கம், அண்டை அயலார் உறவு, குடும்பம், ஆட்சிமுறை, நீதி செலுத்துதல், தண்டனை வழங்குதல் என அவனின் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வை தன்னகத்தே கொண்ட இயற்கை மார்க்கம் தான் இஸ்லாம்.
இதனைச் சரியாக விளங்காத அல்லது விளங்கிக் கொண்டு இஸ்லாமிய வாழ்க்கை முறையின் பால் கொண்ட அதீத வெறுப்பின் காரணமாகச் சிலர் இஸ்லாத்தை முரட்டு மார்க்கம் என்றும் இஸ்லாத்தைத் தெளிவாகக் கடைபிடிக்கும் இஸ்லாமியர்களை இவ்வுலகத்தோடு ஒன்றி வாழத் தகுதியற்றவர்கள் என்றும் இஸ்லாம் இவ்வுலக அமைதிக்கு எதிரான ஒரு வன்முறை மதம் என்றும் கண்மூடித்தனமாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மக்களின் மனதில் விஷத்தை விதைத்து வருகின்றனர்.
இஸ்லாம் மனிதனின் வாழ்வுக்கு நிரந்தரமான தீர்வுகளை வழங்கும் மார்க்கம் என்பதை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.ஒரு பொருளை எவ்விதம் பயன்படுத்தினால் அது மிகச் சிறந்த பயனைத் தரும் என்பதும் அது கெடாமல் இருக்கும் என்பதும் அப்பொருளை உருவாக்கியவனுக்கு நன்றாகத் தெரியும். அது போல் தான் மனிதன் எவ்விதம் வாழ்ந்தால் இவ்வுலகம் நன்மையோடு சுபிட்சமடையும் என்பது இவ்வுலகைப் படைத்தவனுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த இறைவன் வழங்கிய சரியான வாழ்க்கைத் திட்டமான இஸ்லாம் மனிதனின் பிரச்சனைகளுக்கு எவ்விதம் நிரந்தர தீர்வாக அமையும் என்பதை இத்தொடரின் மூலம் சிறிது காண்பதற்கு முயல்வோம்.
இஸ்லாம் பெண்களைக் கொடுமைப் படுத்துகிறது, இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் கொடூரமானவை என்று இஸ்லாத்தை களங்கப்படுத்த முயற்சிக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு எண்ணம் கொண்டவர்களின் புத்திக்கு மிகச் சரியாக உறைக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தகாத உறவு கொள்பவர்களுக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன் சாராம்சம் வருமாறு:
மாற்றானுடன் தகாத உறவு (கள்ளக் காதல்) புரியும் மனைவியைக் கொல்வது குற்றமன்று!
(மதுரை: ஆகஸ்ட் 06, 2006) : கள்ளத் தொடர்பை விடுமாறு கூறியும் கேட்காத மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்வது , கொலைக் குற்றச்செயல் ஆகாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரின் தண்டனையை 7 ஆண்டாக மாற்றியும் உயர் நீதி மன்றக் கிளை தீர்ப்பளித்தது.திண்டுக்கல்லைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி வேறு ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். இதை பலமுறை பாபு கண்டித்தும் அதை அவரது மனைவி கேட்கவில்லை. உள்ளூர் பெரியவர்களிடம் புகார் செய்தும், அவர்கள் கண்டித்தும் கூட பாபுவின் மனைவி கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாபு தனது மனைவியைக் கொலை செய்தார்.
அவர் மீது திண்டுக்கல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இ.பி.கோ 302 (திட்டமிட்டுக் கொலை செய்தல்) பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து பாபு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி சொக்கலிங்கம், செல்வம் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர். பலமுறை தனது மனைவியை எச்சரித்தும் அவர் கேட்காததால் அடைந்த கோபம் மற்றும் ஆத்திரத்தால் தான் பாபு கொலை செய்துள்ளார். எனவே இதை திட்டமிட்ட கொலையாக கருத முடியாது. வேண்டும் என்றே அவர் இதனை செய்யவில்லை.
எனவே இதை 302 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை. 304 (1) 'உந்துதலால் கொலை செய்வது' பிரிவின் கீழ்தான் இந்த வழக்கைப் பதிவு செய்திருக்க வேண்டும். எனவே பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்.காம் 6/8/2006
http://thatstamil.oneindia.in/news/2006/08/06/pronounce.html
இவர்களுக்கிடையில் இப்படிப் பட்ட சம்பவம் நிகழ அடிப்படைக் காரணம் அவர் மனைவிக்கு அவரை விட மற்றொருவர் பிடித்திருந்ததே காரணமாகும். பிடிக்காத கணவனை மணவிலக்கு செய்து விட்டு பிடித்தவருடன் வாழ வழிவகை செய்யும் ஒரு வாழ்க்கைத் திட்டம் இவர் மனைவிக்கு கிடைக்காததே இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும். இஸ்லாம் திருமணத்தை ஓர் இல்லற ஒப்பந்தமாகத் தான் கருதுகிறது. கணவனோ, மனைவியோ இவ்வொப்பந்தம் பிடிக்கவில்லையெனில் இலகுவான முறையில் பரஸ்பரம் மணவிலக்குப் பெறுவதன் மூலம் முடித்துக் கொள்ளலாம்.
ஆனால் நடைமுறையில் விவாகரத்துச் சட்டங்கள் அநியாயத்திற்கு தாமதிக்கப்படுவதால் பாலுணர்வுக்கு ஆட்பட்டவர்கள் தவறிழைக்கவும் மற்றவர்கள் அதனைத் தொடர்ந்த குற்றங்கள் புரிவதற்கும் காரணமாகி விடுகின்றது. கணவன் மனைவி திருமண பந்தமும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளும் இஸ்லாமிய முறைப்படி அமைந்திருந்தால் பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தால் தான் விரும்பியவருடன் உறவு கொண்ட ஒரு பெண்ணின் உயிரிழப்பும், மனைவியின் மீது ஆழ்ந்த காதல் கொண்ட ஒரு ஆணின் ஏழு வருடம் சிறைத் தண்டனையும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
இவற்றைக் கணக்கில் கொண்டே இஸ்லாம் மனம் ஒத்துப் போகாதவர்கள் விரும்பினால் பிரிந்து தங்களுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கைத் துணையை ஏற்படுத்திக் கொள்ள மணவிலக்கை மிக இலகுவாக்கியுள்ளது.
அதிலும் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அந்த மணவாழ்க்கை பிடிக்கவில்லை எனில் நிமிட நேரங்களிலேயே மணவாழ்வை முறித்துக் கொள்ள இயலும். இது அவர்களிடையே பரஸ்பரம் இணைய எவ்வித சாத்தியமும் இல்லாத பட்சத்திலேயாகும்.
(கணவன்-மனைவி ஆகிய) இருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால், கணவரின் உறவினர்களிலிருந்து ஒருவரையும், மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்கு உணர்கிறவனாகவும் இருக்கிறான். (குர்ஆன் 04/035)
எனப் பிணக்கு ஏற்பட்ட கணவன் மனைவியை சேர்த்து வைக்க இஸ்லாம் கூறுகிறது. இதில் அவர்களுக்கிடையில் எவ்வித இணக்கமும் ஏற்படவில்லை எனில் அவர்கள் பிரிந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வலியுறுத்துகிறது. இவ்வளவு இலகுவான தீர்வை வழங்கியப் பிறகே இதிலிருந்து யாராவது வரம்பு மீறுவார்கள் எனில் அதாவது மணவாழ்விலேயே மாற்றார்களுடன் தகாத உறவு கொள்வார்கள் எனில் அவர்களை பொது மக்கள் முன்னிலையில் கல்லெறிந்து கொன்று விட இஸ்லாம் கூறுகிறது.
திருமணம் புரியாதவர்கள் விபச்சாரம் புரிந்தால் கசையடி கொடுக்கவும் கட்டளையிடுகிறது.
விபச்சாரனும், விபச்சாரியும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே , நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவரின் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். இன்னும் இவ்விருவரின் வேதனையையும் முஃமீன்களின் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (குர்ஆன் 24/002)
வாழ்க்கை முறையை எளிமையாக்கிய கையோடு அவ்வளவு எளிமையான வாழ்க்கை முறையில் ஒழுக்கத்தைப் பேணாமல் தன்னுடைய துணைக்கு துரோகம் இழைக்கத் துணிபவர்களுக்கும், சமூக ஒழுக்கத்தை சீரழிக்க முயல்பவர்களுக்கும் இஸ்லாம் கடுமையான குற்றவியல் தண்டனைச் சட்டத்தை பொதுவில் அமுல் படுத்தப் பணிக்கிறது. இதன் மூலம் விபச்சாரத்தையும், சமூகச் சீரழிவையும் உலகத்திலிருந்து ஒழிக்க இஸ்லாம் முயல்வதோடு சிறந்த முன் மாதிரியான பரஸ்பர நம்பிக்கையும் அன்பும் கொண்ட குடும்ப வாழ்வு அமையவும் இஸ்லாம் வழிவகை செய்கிறது.
ஆக்கம்: நல்லடியார்எழுதியவர்: நல்லடியார் , August 23, 2006 06:37
ஒரு சிறு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். //பிணக்கு ஏற்பட்ட கணவன் மனைவியை சேர்த்து வைக்க இஸ்லாம் கூறுகிறது. இதில் அவர்களுக்கிடையில் எவ்வித இணக்கமும் ஏற்படவில்லை எனில் அவர்கள் பிரிந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வலியுறுத்துகிறது. இவ்வளவு இலகுவான தீர்வை வழங்கியப் பிறகே இதிலிருந்து யாராவது வரம்பு மீறுவார்கள் எனில் அதாவது மணவாழ்விலேயே மாற்றார்களுடன் தகாத உறவு கொள்வார்கள் எனில் அவர்களை பொது மக்கள் முன்னிலையில் கல்லெறிந்து கொன்று விட இஸ்லாம் கூறுகிறது. // தகாத உறவு கொள்பவர்களை பொதுவில் தண்டிக்கச் சொல்லும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் சற்று அதிகமான தண்டனை என்று மாற்றுமத நடுநிலை சிந்த்னை கொண்டவர்கள் கேட்கலாம். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் நோக்கம், தண்டிப்பதல்ல; மாறாக, கடுமையான தண்டனைகளுக்குப் பயந்து அத்தகைய குற்றங்கள் நடந்து விடக்கூடாது என்பதை புரிந்து கொண்டால், தண்டனைகளின் நியாயம் விளங்கும். -நல்லடியார்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment