Monday, December 21, 2009

[தமிழமுதம்] கருணாநிதிக்கு `தமிழ்த் தலைமகன்' விருது

http://sangamamlive.in/index.php?/content/view/6706/31/

கருணாநிதிக்கு `தமிழ்த் தலைமகன்' விருது
Monday, 21 December 2009
சென்னை, கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில், சென்னையில் நடந்த
கோலாகல விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு `தமிழ்த் தலைமகன்' விருது
வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு வெளியே முதன் முதலில் அமைக்கப்பட்ட மூத்த தமிழ்
சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ் சங்கம், கொல்கத்தாவில் இயங்கிவருகிறது.

தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த இருக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதியின்
தமிழ் தொண்டை பாராட்டி, `தமிழ்த்தலைமகன்' என்ற விருதை வழங்குவது என்று
அந்த சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.


அதன்படி, கருணாநிதிக்கு விருது வழங்கும் விழா, சென்னை வள்ளுவர்
கோட்டத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவுக்கு, அண்ணா
பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வி.சி.குழந்தைசாமி தலைமை தாங்கினார்.

கொல்கத்தா பாரதி தமிழ் சங்க ஆலோசகர் ஞானசேகரன் விருது மடலை வாசித்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு `தமிழ்த்தலைமகன்' விருதை
கொல்கத்தா பாரதி தமிழ் சங்க தலைவர் சிவகுமார் தலைமையில், சங்கத்தின்
அமைப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் இணைந்து வழங்கினார்கள்.

அப்போது, அரங்கத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கைதட்டி
கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விருதுடன் நினைவு பரிசு, பாராட்டு
சான்றிதழ், தங்க மெடல் ஆகியவையும் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.

விழாவில், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர்
கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், கவிஞர் கனிமொழி எம்.பி.,
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், மத்திய மந்திரிகள்,
தமிழக அமைச்சர்கள், திரைப்பட துறையினர், தி.மு.க. துணை பொது செயலாளர்
சற்குணபாண்டியன், தி.மு.க. மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, நடிகர்
பிரசாந்த், நடிகை தேவயானி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.

தமிழ்த்தலைமகன் விருது பெற்ற முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, இந்தியாவில்
உள்ள 20 தமிழ் சங்க நிர்வாகிகளும், வெளிநாடுகளில் உள்ள 6 தமிழ் சங்க
நிர்வாகிகளும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.

விருது பெற்ற முதல்-அமைச்சர் கருணாநிதியை பாராட்டி, பனை தொழிலாளர் நல
வாரிய தலைவர் குமரிஅனந்தன், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்
அவ்வை நடராஜன், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பேசினார்கள்.

பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரிஅனந்தன் பேசும்போது, "கம்பனே ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரை பற்றி சொல்லியிருக்கிறார். "திருக்குவளை
கண்விழித்து நோக்க'' என்று பாடியுள்ளார். சட்டமன்றத்தில் அவரது காலத்தில்
நானும் இருந்துள்ளேன். எந்த கேள்விக்கும், எடுத்த உடனேயே பதில் சொல்லும்
ஆற்றல் படைத்தவர் அவர். இனி ஒரு உலக தமிழர் இவ்வளவு எழுத முடியுமா? என்று
என்னும் அளவுக்கு எழுதியுள்ளார்'' என்றார்.

தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் பேசும்போது,
"எல்லோரும் செந்தமிழை பெண் என்கிறார்கள். ஆனால், அதற்கு ஆண் வடிவம்
இருந்தால் இவரைப்போல்தான் இருந்திருக்கும். நீங்கள், தொல்காப்பியம்,
சிலப்பதிகாரம், திருக்குறளை தொட்டீர்கள். இம்மூன்றும்தான் செம்மொழிக்கு
அடையாளம். உங்களை தவிர தமிழ் தாண்டியவர் எவரும் இல்லை என்று தமிழ்
பல்கலைக்கழகமே சொல்கிறது'' என்றார்.

நடிகர் சிவகுமார் பேசும்போது, "முதல்-அமைச்சர் கலைஞர் எந்த கல்லூரியிலும்
படிக்கவில்லை. எம்.ஏ., பி.ஏ. பட்டம் பெறவில்லை. ஆனால், இலக்கியங்களை
நன்கு கற்று எழுதிக்கொண்டிருக்கிறார். `பராசக்தி' படம் தான் நல்ல தமிழை
எனக்கு வாசிக்க, நேசிக்க சொல்லி கொடுத்த படம். இவருக்கு 86 வயது பெரிய
வயதா என்ன?. என்னுடைய ஆசை எல்லாம் நீங்கள் 125 ஆண்டுகள் வாழ வேண்டும்
என்று வாழ்த்துகிறேன்'' என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

இந்த விருதால் இவருக்கு பெயரா?, சிகரமா?. இல்லை. இது அவருக்கு ஒரு
நிகழ்வு, சந்தர்ப்பம் அவ்வளவுதான். தமிழ் சமூகம் உற்சாகம் பெற இதை அவர்
ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ் தலைமகன் விருது இவருக்கு கொடுக்க காரணம்,
தமிழர்களாக வாழும் எல்லோரையும் விட அவர் மேம்பட்டவர். மனிதனுக்கு 2 பசி
உண்டு. ஒன்று வயிற்று பசி. மற்றொன்று இதயப் பசி. சோறு போட்டு வயிற்று
பசியை அடக்கிவிடலாம். ஆனால், இதய பசிக்கு கலையை உணவாக வழங்கியவர் கலைஞர்.
இரைப்பை, இதயப்பை இரண்டையும் நிறைப்பவர் கலைஞர்.

பெண்களுக்கு சிறப்பு என்னவென்றால் பெண்களால் பாராட்டப்படுவது.
படைப்பாளிக்கு சிறப்பு படைப்பாளிகளால் பாராட்டப்படுவது. கவிஞர் சுரதா,
கவிஞர் கண்ணதாசன் ஆகியோரால் பாராட்டப்பட்டவர் கலைஞர். ஆத்திகனும்,
நாத்திகனும் வாழ வேண்டும் என்று பேருள்ளம் கொண்டவர்.

உலக மக்கள் தொகையில் தமிழுக்கு 17-வது இடம். ஆட்சி மொழியில் தமிழுக்கு 14-
ல் ஒரு இடம். ஜனத்தொகையில் தமிழுக்கு 6-வது இடம். ஆனால், தமிழை செம்மொழி
ஆக்கியதால் உலக அளவில் 5-வது இடத்திற்கு வந்துவிட்டது. இந்தியாவில் 2
செம்மொழிகளில் ஒன்றாகிவிட்டது. இதற்கு காரணம் முதல்-அமைச்சர் கலைஞர்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

முன்னதாக, கொல்கத்தா தமிழ் சங்கத்தின் ஆலோசகர் மகாலிங்கம் அனைவரையும்
வரவேற்று பேசினார். இறுதியில், செயலாளர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.
பேராசிரியர் பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment