சென்னை: இன்றைக்கு எனக்கு வயது 86. இன்னும் இருக்கின்ற வரையில்
உங்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பேன். என்னுடைய மூச்செல்லாம்
உங்களுக்காகத் தான். இருக்கின்ற வரையில் உங்களுக்காகப் பாடுபட்டுக்
கொண்டிருப்பேன் என்றார் முதல்வர் கருணாநிதி .
கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த்
தலைமகன் விருது வழங்கும் விழா நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில்
நடைபெற்றது.
விருதை பெற்றுக்கொண்ட பின்னர் முதல்வர் கருணாநிதி உரை நிகழ்த்தினார்.
அவர் பேசுகையில்,
நான் என்னுடைய அரசியல் வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் பல
கவிஞர்களோடு நட்பு கொண்டிருக்கிறேன், தொடர்பு கொண்டிருக்கிறேன். ஒரு
சிலர் எனக்கு ஆருயிர் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள், இப்போதும்
இருக்கிறார்கள். ஆனால் என் அருகிலேயே இருந்து, என்னுடைய
உள்ளத்திலேயிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகளை - அந்த உணர்வுகள் பூத்துக்
குலுங்கி, செழித்தோங்கியிருக்கின்ற அந்த ஆர்வம் மிகுந்த கவிதைப்
படைப்புகளை, உரைநடைப் படைப்புகளை மேலும் மேலும் இந்த உலகிற்கு
அறிமுகப்படுத்த வேண்டும், அவற்றையெல்லாம் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள
வேண்டும் என்கிற பெரு விருப்பம் உடையவர் நான் சொன்ன அந்தக் கவிஞர்
கூட்டத்திலே, முதல்வராகத் திகழ்கின்ற என்னுடைய தம்பி வைரமுத்து
அவர்களாவார்.
அதனால் தான் கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அவர் ஏற்பாடு
செய்த இந்த நிகழ்ச்சியிலே இன்று மாலையிலே உங்களையெல்லாம் சந்திக்கின்ற
வாய்ப்பை பெறுகின்ற நிலையில், கலந்து கொள்வது மாத்திரமல்ல, இந்தியாவிலே
எந்தெந்த மாநிலங்களிலே தமிழுக்காகப் பாடுபடுகின்ற மன்றங்கள், சங்கங்கள்
இருக்கின்றனவோ அவற்றுக்கெல்லாம் இந்த அரசின் துணை என்றென்றும் உண்டு என்ற
உறுதியை அளித்திருக்கின்றேன்.
தமிழ்த் தலைமகன் என்று எனக்கு இங்கே விருது வழங்கப்பட்டிருக்கின்றது.
இதிலிருந்து ஒரு உண்மை புரிகிறது. இதுவரையிலே தலை இல்லாமல் இருந்த என்னை
இன்றைக்கு கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தார் தலைமகனாக ஆக்கியிருக்கிறீர்கள்
என்பதற்காக நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
எனக்குத் தந்துள்ள தலைமகன் என்ற விருது எனக்குப் பொருத்தமானது என்று நான்
ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்களும் எண்ணியெண்ணிப் பார்த்து, வைரமுத்து போன்ற
கவிஞர்களோடு சிந்தித்துப் பார்த்து, என்ன விருது கொடுக்கலாம், இதுவரையிலே
இந்தியாவிலே இருக்கின்ற தலைவர்களுக்கெல்லாம் கவிஞர்களுக்கெல்லாம்,
எழுத்தாளர்களுக்கெல்லாம், மொழி உணர்வாளர்களுக்கெல்லாம் என்ன விருதுகளை
அளித்திருக்கிறோம் என்பதை வரிசைப்படுத்தி பார்த்து தலைமகன் என்ற அந்த
விருது தான் தரப்படவில்லை, ஆகவே அதை கருணாநிதிக்குத் தரலாம் என்று
தந்திருக்கிறீர்களே அல்லாமல், நான் தான் தலைமகன் என்று கருதி நீங்கள்
தந்ததாக நான் நினைத்துக் கொள்ளவில்லை. அப்படி எண்ணிக் கொண்டு என்னை
ஏமாற்றிக் கொள்ள விரும்பவும் இல்லை. நான் தலைமகனும் இல்லை. அஞ்சுகத்
தாய்க்கு வேண்டுமானால் நான் மகன் - முத்துவேலருக்கு வேண்டுமானால் நான்
மகன். ஆனால் அந்த இருவருக்கும் அவர்கள் தவமிருந்து தவமிருந்து போகாத
கோயில்களுக்கு எல்லாம் போய் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டு-
நான் தலைமகனாக அல்ல- அப்போதும் மூன்றாவது மகனாகத்தான் பிறந்த என்னை
இன்றைக்கு தலைமகனாக ஆக்கியிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய தலைதாழ்ந்த
வணக்கம். என்னுடைய தலை தாழ்ந்த நன்றி.
நான் சமுதாயத்தில் நம்முடைய தலைவர் இங்கே எடுத்துக்காட்டியதை போல்
பெரியார் வழியில், என்னுடைய தலைவர் அண்ணா வழியில் ஆட்சிப் பொறுப்பிலே
இருக்கின்ற காரணத்தால் அதையும் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் எடுத்து
சொன்ன பல்வேறு தத்துவங்களை, பல கருத்துகளை, அறிவுரைகளை இன்றைக்கு
ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி வருகிறேன். அவற்றிலே ஒன்றுதான் நம்முடைய
தலைவர் இங்கே எடுத்துரைத்த சமத்துவபுரம்.
சமத்துவபுரம் என்பது கடந்த ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பே 4-வது முறையாக
நான் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த போது சொல்லப்பட்ட, தொடரப்பட்ட,
அறிவிக்கப்பட்ட அறிவிப்போடு நில்லாமல் நடைபெற்று வந்த ஒரு மாபெரும்
சமுதாய மறுமலர்ச்சித் திட்டம்- சமதர்ம திட்டம். அந்த சமதர்ம திட்டத்தில்
100 வீடுகள் ஆங்காங்கே அரசின் சார்பில் அழகுறக்கட்டப்பட்டு, அந்த
வீடுகளில் தமிழ்நாட்டிலே இருக்கின்ற சாதிப்பிரிவுகள்- அவைகளையெல்லாம்
ஒன்றாக்க வேண்டும் என்ற முனைப்போடு பிராமணர் உள்ளிட்ட வேறு மதத்தினர்
உள்ளிட்ட அனைவரையும் குடியமர்த்தி- அந்த வீடுகளிலே கூட ஆதி திராவிடர்கள்,
பிராமணர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்
என்று- இவர்களுக்கு எல்லாம் வசதியாக இட ஒதுக்கீடு செய்து அவர்களை வாழ
வைக்கின்ற அந்த நிலையை கடந்த 15 ஆண்டுகளாக தி.மு.க. அரசு ஏற்பாடு செய்து
தொடர்ந்து அத்திட்டம் நடைபெற்று வருகின்றது.
இப்போதும் மாதா மாதம் ஏடுகளிலே நீங்கள் பார்க்கிறீர்கள். சமத்துவபுரங்கள்
திறப்பு விழா, துணை முதல்-அமைச்சர் சென்று அந்த வீடுகளை திறந்து
வைத்தார்- என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ஏற்கனவே 95
சமத்துவபுரங்கள்- பெரியாரின் நினைவாக, அவருடைய வயதை குறிக்கும் வகையில்
தோன்றியிருக்கின்றன. மேலும் தோன்றும், எல்லோரும் சமம், எல்லோரும்
சமத்துவம், சாதி கிடையாது. மதம் கிடையாது. சாதி மத வேறுபாடு கிடையாது
என்ற நிலை தமிழகத்திலே தோன்றும் வரையில் சமத்துவபுரங்கள் தோன்றிக் கொண்டே
இருக்கும்.
அந்த சமத்துவபுரங்களை நிறுவுவதற்கு இன்றைக்கு எவ்வளவு இன்னல்களை நாங்கள்
தாங்கிக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு இடையூறுகளை நாங்கள் எதிர்கொள்ள
வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தால் ஒரு
லட்சியத்தோடு தொடங்கப்பட்ட திராவிட இயக்கம், அந்த திராவிட இயக்கத்திலே
ஒரு துளியாக, விதையாக அன்றைக்கு விழுந்து- செடியாக வளர்ந்து- கொடியாக
விரிந்து- மரமாக இன்றைக்கு பல விழுதுகளோடு ஆலமரமாக நின்று
கொண்டிருக்கின்ற நான், இந்த விருதுகளுக்கு எல்லாம் பெருமை சேர்ப்பதற்காக
அளித்த விருதுதான் தலைமகன் விருது என்று கருதுகிறேன்.
இங்கே வீற்றிருக்கின்ற உங்களை எல்லாம் பார்க்கின்றேன். என்னுடைய
தம்பிமார்களையெல்லாம் பார்க்கின்றேன். தமிழர்களையெல்லாம் பார்க்கின்றேன்.
மேடையிலே உள்ள தமிழ்ப்புலவர்களை எல்லாம் எண்ணுகின்றேன். சிவக்குமார்
போன்ற கலைஞர்களை எல்லாம் நோக்குகின்றேன். இந்த விருது எனக்கல்ல- எனக்கு
என்று சொல்லிக் கொண்டாலும் கூட- நீங்கள் பொய் சொல்வதற்காகவே நான்
கருதுகின்றேன்.
இவர்களுக்கு- இங்கே கூடியிருக்கின்ற தமிழ் பெருமக்களுக்கு - இந்த
மேடையிலே வீற்றிருக்கின்ற தமிழ் அறிஞர்களுக்கு நீங்கள் கொடுத்த
விருதுதான்- அவர்கள் அளித்த- அளித்துக் கொண்டிருக்கின்ற ஊக்கமும்,
உற்சாகமும்தான் இந்த விருதை நான் பெறுவதற்கு வழி வகுத்திருக்கின்றது
என்பதை சொல்ல விரும்புகின்றேன்.
இதே வள்ளுவர் கோட்டத்தை நான் காணுகின்றேன். பல்லாயிரக்கணக்கிலே வந்து
அமர்ந்திருக்கிறீர்கள். மேடைக்கு வரும் போது வைரமுத்து சொன்னார்- பெரும்
கூட்டம் என்றார்- நான் மறுகவில்லை. பெரும் கூட்டம்தான். இந்த பெரும்
கூட்டம் எதையும் என்னிடத்திலே பெறுவதற்காக வந்த கூட்டம் அல்ல. இது
தருவதற்காக வந்த பெரும் கூட்டம். எனக்கு எதைத் தருகிறீர்கள்? ஊக்கத்தை,
உற்சாகத்தை, புதிய வலிமையை எனக்கு தருகின்றீர்கள்.
நான் வெகு விரைவில் முன்னின்று நடத்துகின்ற உலக தமிழ்ச் செம்மொழி
மாநாட்டைப் பற்றி இங்கே அனைவரும் எடுத்து சொன்னார்கள். அப்படி சொன்னபோது,
இந்த மாநாட்டில் எல்லா தமிழர்களும் ஒன்றுபட்டு தமிழ்நாட்டு தலைவர்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ்த்தாயின் பெருமைகளை எடுத்துரைத்து- தமிழன்
என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா- என்று அத்தனை பேரும் தலை
நிமிர்ந்து பாட வேண்டுமே- அந்த நிலை தமிழகத்திற்கு வர வேண்டுமே, அதை இந்த
மாநாட்டின் மூலமாக நாம் உருவாக வேண்டுமே என்கின்ற அந்த நல்ல
எண்ணத்தோடுதான் உலகத் தமிழ் மாநாட்டைப் பற்றி நண்பர்கள் எல்லாம் இங்கே
சொன்ன போது நான் அதைக் கேட்டு உருகிப்போனேன்.
ஓரிருவர் இந்த மாநாட்டிற்கு நாம் அழைத்தும் கூட வராமல் இருந்தாலும் கூட,
அவர்கள் வருவதாகவே கருதி எவ்வளவு எச்சரிக்கையோடு, எவ்வளவு நாகரிகத்தோடு
இந்த மாநாட்டை- அவர்கள் எல்லாம் இருந்தாலும் எப்படி நடத்துவோமோ, அதை
போலவே இல்லாவிட்டாலும் அந்த மாநாட்டை நாம் தமிழ்ப்பண்பாட்டோடு நடத்துவோம்
என்ற உறுதிமொழியை நான் இந்த விழாவின் மூலமாக தமிழ் மாநாட்டிற்கு வர
இயலாது, வர முடியாது- இயலாது என்பது வேறு, முடியாது என்பது வேறு- இயலாது
என்பது பொள்ளாச்சி மகாலிங்கம் உடல் நலிவு காரணமாக வரமுடியாமல் போயிற்றே.
அது இயலாது. முடியாது என்பது உன்னை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற
முறையிலே சொல்லப்படுவது. எனக்காக அல்ல, என் தமிழ்த் தாய்க்காக, உங்கள்
தமிழ்த் தாய்க்காக, உங்கள் தமிழ் அன்னைக்காக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
உங்களுக்கும் சேர்த்துத் தான் நடைபெறுகின்றது என்ற அந்த எண்ணத்தோடு
அனைவரும் ஒத்துழைத்து அந்த மாநாட்டினை நடத்தித் தரவேண்டும் என்று நான்
கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு நீங்கள் வழங்கியுள்ள இந்த விருது குமரிஅனந்தன் குறிப்பிட்டதைப்
போல இது விருது என்றாலும் - நான் எங்கேயோ சென்று வெற்றி வாகை சூடி
கிடைத்த விருது அல்ல. நாளைக்கு கிடைக்கப் போகிற வெற்றிக்கு முன்
எச்சரிக்கையாகத் தரப்பட்ட விருதும் அல்ல. நான் எப்போதும் வெற்றிகளைத்
தேடி அண்ணா சொன்னதைப் போல அலைபவனும் அல்ல. தோல்விகளால் துவண்டு
விடுபவனும் அல்ல.
நீங்கள் இருக்கும்போது - உங்களுடைய அன்பும் ஆதரவும் இருக்கும்போது
எனக்கென்ன மனக்குமுறல்? மனதிலே வீழ்ச்சி? மனதிலே களைப்பு? மனதிலே
சலிப்பு? இவைகள் எல்லாம் இருக்கத் தேவையில்லை. எனவே தான் உங்களுடைய
அன்புக்குக், கட்டுப்பட்டவன், உங்களுடைய பாசத்திற்குக் கட்டுப்பட்டவன்,
இங்கே வீற்றிருக்கின்ற உங்கள் அத்தனை பேருடைய ஒத்துழைப்பும், நல்
உணர்வும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு தொடர்ந்து கிடைக்குமேயானால்
நீடித்துக் கிடைக்குமேயானால் நாம் விரும்புகின்ற தமிழ் நல்லுலகத்தைப்
படைத்தே தீருவோம். அந்த நல்லுலகம் சாதி சமயமற்ற, மத வேறுபாடற்ற,
புரட்சிகரமான சமுதாயமாக, பகுத்தறிவு சமுதாயமாக, பண்பார்ந்த சமுதாயமாக
விளங்கும். அப்படி விளங்குவதற்கு ஏதுவாக நீங்கள் அளித்த இந்த விருதை நான்
ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
மகன் போர்க்களத்திலே சாக வேண்டுமென்று அந்தப் புகழ் தன் குடும்பத்திற்கு
வரவேண்டுமென்று ஒரு தாய் விரும்பிய அந்தக் காலம் தமிழகத்தின் ஒளிமயமாக
வீரம் மிகுந்த காலம். அந்தக் காலம் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து
தாங்கள் பெற்ற மகனை கோழையாக வளர்க்கின்ற தாய்களும் நிறைந்து - அதன்
காரணமாக நம்முடைய மொழிக்கே முடிவு கட்டுகின்ற சூழ்நிலைகள் எல்லாம்
உருவாகி, அதிலேயிருந்து நம்மை விடுவித்து சமுதாய விடுதலையை தந்து -
மொழிப்பற்றாளர்களாக நம்மையெல்லாம் ஆக்கி - நாம் தமிழன் - நாம் மொழி
உணர்வு மிக்க தமிழன் - தமிழ்த் தாயின் தவப்புதல்வன் - நாங்கள்
ஒவ்வொருவரும் தமிழ்த் தாயின் தலைமகன்கள் தான் - யாருக்கும் விலைமகன்கள்
அல்ல - அந்தத் தலைமகன்களாகவே இருப்போம் என்ற அந்த உணர்வை
உருவாக்கியிருக்கின்ற தலைவர்களுக்கெல்லாம் வணக்கத்தை தெரிவித்து, மரியாதை
தெரிவித்து நான் பெற்ற இந்தப் பேறு எனக்கு கிடைத்த இந்த விருது என்
ஆற்றலால் அல்ல, என்னைத் தட்டிக் கொடுத்து வளர்த்த பெரியாரால், என்னை
ஊகப்படுத்தி உயர்த்திய என் அண்ணன் அண்ணாவால் - உங்களால் என்ற இந்த
உண்மையை என்றைக்கும் மறக்காமல் -
இன்றைக்கு எனக்கு வயது 86 என்றால், இன்னும் இருக்கின்ற வரையில்
உங்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பேன். என்னுடைய மூச்செல்லாம்
உங்களுக்காகத் தான். நீங்கள் கையொலி செய்வது ஏனென்று புரிகிறது.
இருக்கின்ற வரையில் உங்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பேன் என்று
சொன்னேன். இடையிலே அரசு பொறுப்பிலேயிருந்து நான் சற்று ஒதுங்கிக் கொண்டு
உங்களுக்காகப் பாடுபடுவேன் என்று சொன்னேன் - அது என்ன ஆயிற்று என்று
நாளைக்கு சில அவசரக்காரர்கள் எழுதுவார்கள், பேசுவார்கள் - அது அப்படியே
தான் இருக்கிறது என்பதை இந்த வள்ளுவர் கோட்டத்திலே எடுத்துக் கூறி
விடைபெறுகிறேன் என்றார் கருணாநிதி.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment