முன்னுரை
இது ஒரு சமுதாய வரலாறு. சுதந்திரம் கிடைத்த பின்னர் அரசு, அரசியல்,
மற்றும் மக்கள் இணைந்து ஆற்றிய செயல்கள், காலத்தின் போக்கிலே
ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் இவைகளைக் காணலாம். இந்த தொடர்
சென்னை ஆன் லயனில் வந்து கொண்டிருக்கின்றது. மின் தமிழில் வந்த எண்ணங்கள்
ஊர்வலத்தின் தொடர் என்றும் கூறலாம். ஒரு முறையாவது
இத் தொடரை வாசிக்க வேண்டிக் கொள்கின்றேன். பல பயிற்சிகள் பெற்று
பல பிரிவுகளில் பணியாற்றியவள். எனக்குச் சில வாய்ப்புகள் அதிகமாகவே
கிடைத்தன. எனவே என் அனுபவங்கள் பல தகவல்களைச் சுமந்து வரும் என்பதைப்
பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்
----------------------------------------------------------------------------------------------------
தண்ணீர்விட் டோவளர்த்தோம்?
சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்;
கருகத் திருவுளமோ?
ஓராயிர வருடம்
ஓய்ந்து கிடந்தபின்னர்
வாராது போலவந்த
மாமணியைத் தோற்போமோ?
சுதந்திரப்பயிர் நினைத்து பாரதி பாடியவை,
இக்காலச் சுழலுக்கும் பொருந்துமன்றோ?
வரலாற்றுச் சுவடுகளைப் பார்த்தால் மனிதன் ஓடி ஓடி அலைந்து, புலம்
பெயர்ந்து , விலங்கு வாழ்க்கையை வெறுத்து , அமைதி வாழ்க்கைக்கு
ஓர் கோட்பாடு கண்டான். குடும்பமும், கூட்டமாக வாழும் சமுதாயமும்
பிரச்சனைகளின்றி வாழத், தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக்
கொண்டு வாழத் தொடங்கினான். இலக்கிய வாழ்க்கை கிடைத்தது.
காலச் சக்கரத்தின் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது. சூழ்நிலையின்
தாக்கங்கள் அவனை, அவன் வாழ்க்கையை அசைக்க ஆரம்பித்துவிட்டது.
காலத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் மனிதன்
இருக்கின்றான். வாழும் முறைகளின் இடைவெளி
மிரட்டுகின்றது
பாரதியின் ஊர்க்காரியான எனக்கும் ஓர் ஆதங்கம் உண்டு
உருண்டோடும் காலத்திலே
உயிர்பிழைக்க ஓடியவன்
மருண்டோடும் வாழ்வொதுக்கி
மகிழ்வில்லம் கண்டுகொண்டான்
அருள்கண்டான்!அன்புகண்டான்!
அமைதிகாக்கும் குடில்கண்டான்!
கருகத்தான் விடலாமோ?
காத்திடுதல் கடமையன்றோ
என் நினைவலைகள் உங்களை வருடும் பொழுது உங்களுக்குப் புரியாதவளாக இருக்க
விரும்பவில்லை. என் பிள்ளைப் பருவ நிகழ்வுகளை எங்கோ கொட்டிவிட்டேன்.
உங்களிடம் சின்ன அறிமுகம் செய்து கொள்ள நினைக்கின்றேன். நினைவலைகள்
நீண்டதொரு பயணம். அதற்குரிய சக்தி எனக்கு எங்கிருந்து கிடைத்தது? கரிசல்
மண் எட்டயபுரம் செதுக்கிய ஒரு பெண் நான்..
என் தந்தை சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறை சென்றவர்.
சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்த்தார்.
தேவைக்கு மேல் எது வைத்திருப்பினும் அவன் திருடன் என்பார். எளிய
வாழ்க்கையில் பழக்கினார்.
எங்கு சென்றாலும் என்னைஅழைத்துச் செல்வார். முதன் முதலில் பார்த்த
அரசியல்வாதி இராஜாஜி அவர்கள். நான் பார்த்த முதல் எழுத்தாளர் கல்கி
அவர்கள். ஆரம்பமே எனக்கு உச்சம். பாரதி மண்டபம் எழுப்ப ஆலோசனை செய்ய
வந்தவர்கள். அவர்களைப் பார்க்க என் தந்தை கூட்டிச் சென்று வணங்கி ஆசி
பெறச் சொன்னார். எழுதும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு தொடங்கும்
பழக்கம் பலருக்கும் உண்டு. எனக்கோ இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துதான்
எழுத ஆரம்பிப்பேன். கல்கியின் தரிசனம் பத்திரிகைகள் படிக்கத் தூண்டியது.
அதிலிருந்து படிக்கும் பழக்கம் என்னைவிடவில்லை.
நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் பிறந்தவள். ஒரு வயது கூட ஆகவில்லை.
சுதந்திரப் போராட்டத்திற்குச் சென்ற தந்தை ஐந்து வருடங்களுக்குப் பின்னரே
வீட்டிற்கு வந்தார். வந்தாலும் காந்திக் கட்சியில் தொடர்பு
வைத்திருந்தார். குழந்தைப் பருவத்தில், காக்கா கதை, நரிக்கதை சொல்லிக்
கேட்டிருப்போம். எனக்கு நாட்டுக் கதை, காந்தி கதை
சொல்லி வளர்த்தார்கள். கவுன் போட்டுக் கொண்டு ,கையில் \காங்கிரஸ் கொடி
ஏந்தி அப்பாவுடன் ஊர்வலங்களுக்குச் சென்றிருக்கின்றேன். இராட்டை நூற்று,
கதர்ச் சிட்டம் கடையில் போட்டு கதர்த் துணி வாங்கி உடுத்தியவள் நான்.
கதர் துணி பார்த்தால் எனக்கு காந்தி நினைப்புதான் வரும். அந்தச் சூழலில்
ஏற்பட்ட உணர்வுகளே வேறு. பாட்டு வாத்தியார் கூட கீர்த்தனைகள் சொல்லிக்
கொடுப்பதுடன், வைஷ்ணவ ஜனதோ, வந்தே மாதரம், சாந்தி நிலவ வேண்டும்
பாட்டுக்களை சொல்லிக் கொடுப்பார்.. சுதந்திர தாகம் பட்டிகளிலும்
இருந்தது. ஒவ்வொருவரின் துடிப்பிலும் நாட்டு நினைவு கலந்திருந்தது.
என்னுடைய சமுதாய அக்கறைக்கு அடித்தளம் அமைத்தது என்பிள்ளைப் பருவ
வாழ்க்கைதான்.
என் பயணம் எட்டயபுரத்தைவிட்டுப் புறப்படப் போகின்றது
அலைகள் மீண்டும் வரும்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment